வெடிகுண்டு எதிர்ப்பு சாதனங்கள் தர நிர்ணயம் வெளியிட்ட பி.ஐ.எஸ்.,
வெடிகுண்டு எதிர்ப்பு சாதனங்கள் தர நிர்ணயம் வெளியிட்ட பி.ஐ.எஸ்.,
ADDED : டிச 28, 2025 01:04 AM

புதுடில்லி :வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் சாதனங்கள், பொருட்களுக்கான தர நிலைகளை பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய அமைப்பு வெளியிட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு தயார் நிலைக்கும், மேற்கண்ட தயாரிப்புகளின் உற்பத்தி முறைகளுக்கும் இடையேயான இடைவெளியை சரி செய்வதற்காக இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த சாதனங்களுக்கு ஐ.எஸ்., 19445:2025 என்ற தர நிர்ணய குறியீடு வழங்கப்படுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம், 'டெர்மினல் பாலிஸ்டிக் ரிசர்ச் லெபாரட்டரி' ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க, மத்திய நுகர்வோர் பாதுகாப்புத்துறை இந்த உற்பத்தி தர நிலைகளை உருவாக்கியுள்ளது.
இச்சாதனங்களின் வெடிகுண்டு தாங்குதிறன், வெடிச்சிதறல்களுக்கு எதிரான தாங்குதிறன் ஆகியவை திருப்திகரமாக உள்ளனவா என்பதை உற்பத்தி கட்டத்திலேயே உறுதிப்படுத்த இவை பயன்படும். கொள்முதல் முகவர் நிறுவனங்கள், தயாரிப்பாளர்கள், பரிசோதனை மையங்கள் சுயமாக தரத்தை உறுதி செய்வதற்கு இது உதவும்.
வெடிக்காத குண்டுகளை பாதுகாப்புடன் அகற்றுவதற்கான கருவிகள் இன்றைய ஆபத்துகளை துல்லியமாக எதிர்கொள்ள, ஏற்கனவே உள்ள சர்வதேச தர நிலைகள் போதுமானவையாக இல்லை.
எனவே, இந்திய சூழலுக்கேற்ற உற்பத்திக்கான தர நிலையை உருவாக்க வேண்டியிருப்பதாக நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

