ஜி.எஸ்.டி., ஆண்டு அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டிக்க கோரி பா.ஜ., மனு
ஜி.எஸ்.டி., ஆண்டு அறிக்கை தாக்கல் காலக்கெடு நீட்டிக்க கோரி பா.ஜ., மனு
ADDED : டிச 28, 2025 01:05 AM

சென்னை: 'ஜி.எஸ்.டி., தொடர்பான ஆண்டு அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை, இம்மாதம், 31ம் தேதியில் இருந்து, 2026 பிப்., 20 வரை நீட்டிக்க வேண்டும்' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, தமிழக பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி கோரிக்கை மனு அளித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அணியின் தலைவரும், ஆடிட்டருமான எஸ்.சுந்தர் ராமன் கூறியதாவது:
ஆண்டுதோறும், 2 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள பதிவுபெற்ற நிறுவனங்கள், ஜி.எஸ்.டி.ஆர்., - 9 ஆண்டு அறிக்கையை கட்டாயமாக தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.
அதேபோல், 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்கள் ஆடிட்டர் சான்றுடன், ஜி.எஸ்.டி.ஆர்., - 9சி படிவத்தையும் தாக்கல் செய்ய வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையிலும், மத்திய நிதி அமைச்சர் முன்னெடுத்து வரும், ஜி.எஸ்.டி., 2.0 சீர்திருத்தங்களின் பயனாக, நாட்டின் வரி அமைப்பு மேலும் எளிமைப்படுத்தப்பட்டு, வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்நுட்ப மேம்பாடு பெறப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தொழில், வணிகம், தொழில்முனைவோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், குறிப்பாக, வருடாந்திர கணக்குகள் முடித்தல், ஒத்திசைவு செயல்முறை, பல்வேறு சட்டப்பூர்வ தாக்கல்களுக்கு ஏற்பட்ட நேர கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டு, கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என, கோரப்பட்டு உள்ளது.
ஜி.எஸ்.டி., தொடர்பான ஆண்டு அறிக்கைகள் மற்றும் சான்றிதழ்கள் தாக்கல் செய்வதற்கு கால ஒத்திசைவு ஏற்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி.ஆர்., - 9 மற்றும் ஜி.எஸ்.டி.ஆர்., - 9சி படிவங்கள் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளை, இம்மாதம், 31ம் தேதியில் இருந்து, 2026 பிப்., 20 வரை நீட்டிக்கப்பட வேண்டும் என, தமிழக பா.ஜ., தொழில் துறை வல்லுநர் அணி சார்பில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

