இந்திய ஐபோன் ஆலைகளில் சீனர்கள் அனுப்புவதை நிறுத்தியது பாக்ஸ்கான்
இந்திய ஐபோன் ஆலைகளில் சீனர்கள் அனுப்புவதை நிறுத்தியது பாக்ஸ்கான்
ADDED : ஜன 11, 2025 09:56 PM

புதுடில்லி:இந்திய ஐபோன் தொழிற்சாலைகளுக்கு சீன தொழிலாளர்களை அனுப்புவதை பாக்ஸ்கான் நிறுவனம் நிறுத்திஉள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்பிள் போன் தயாரிப்பு கூட்டு நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவில் உள்ள அதன் தொழிற்சாலை களுக்கு சீன தொழிலாளர்களை அனுப்புவதற்கு பதிலாக தைவான் தொழிலாளர்களை அனுப்ப துவங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்தியாவிற்கான, உதிரிபாகங்கள் ஏற்றுமதியும் தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இது இந்தியாவில் உள்ள பாக்ஸ்கானின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. இதுதவிர, சீனாவில் இருந்து ஐபோன் உற்பத்தியை இந்தியாவிற்கு மாற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் திட்டங்களுக்கும் இது தடைக்கல்லாக மாற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
பயணம் ரத்து
உதிரிபாகங்களின் ஏற்றுமதி தாமதத்தால், முதன்மை யாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உள்ள பாக்ஸ்கான் ஐபோன் உற்பத்தி ஆலைகளை பாதிக்கிறது. பாக்ஸ்கான் கடந்த 2019ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள அதன் ஆலையில் ஐபோன்களை உற்பத்தி செய்ய துவங்கியது.
இந்திய உற்பத்திக்காக சீனாவில் இருந்து பெறப்பட்ட சிறப்பு இயந்திரங்களையும், சீன தொழிலாளர்களையும் அது சார்ந்துள்ளது.
இந்நிலையில், சீன தொழிலாளர்கள் இந்தியாவுக்கான தங்கள் பயணங்களை ரத்து செய்யுமாறு கேட்டுக்கொண்டதாகவும், ஏற்கனவே, விசா மற்றும் விமான டிக்கெட்டுகள் பெற்ற ஊழியர்களின் பயணத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உற்பத்தி அதிகரிப்பு
இதேபோல், இந்தியாவில் ஏற்கனவே உள்ள சீன தொழிலாளர்களும் நாடு திரும்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஏற்படும் இடையூறுகளை தணிக்கும் வகையில், சீனத் தொழிலாளர்களுக்கு மாற்றாக தைவான் தொழிலாளர்களை பணியமர்த்துவது குறித்து பாக்ஸ்கான் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
தொழிலாளர்கள் பணியமர்த்தல் மற்றும் உபகரண ஏற்றுமதிகளை நிறுத்தி வைப்பதற்கு சீன அரசே பொறுப்பு என சில வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, இந்தியாவில் ஐபோன் அசெம்பிளிக்கு போதுமான ஐபோன் உதிரிபாகங்கள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக பாக்ஸ்கான் தன் சீன தொழிற்சாலையில் உற்பத்தியை அதிகரித்து வருகிறது.