ADDED : மார் 07, 2026 02:06 AM

''இந்தியா, 37 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது; பிரிட்டனுடனான ஒப்பந்தம் ஏப்., 15 முதல் நடைமுறைக்கு வரும்,'' என, ஏ.இ.பி.சி., தலைவர் சக்திவேல் தெரிவித்தார். 'நிட்டெக் -2026' கண்காட்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
ஐரோப்பிய யூனியன், பிரிட்டனுடன் உருவாகியுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், திருப்பூருக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும். பிரிட்டனுடன் கையெழுத்தான ஒப்பந்தம், ஏப்., 15 முதல் நடைமுறைக்கு வர வாய்ப்பு உள்ளது. மொத்தம், 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியனுக்கு, 35 சதவீதம் ஆடை ஏற்றுமதி நடக்கிறது.
மிகப்பெரிய சந்தையான அமெரிக்காவுக்கு, 30 முதல் 33 சதவீதம் ஏற்றுமதியாகிறது. அமெரிக்காவுடன், பரஸ்பர வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும். அமெரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு பின், இறக்குமதி வரி, 10 சதவீதமாக குறைந்துள்ளது. ஒப்பந்தம் ஏற்படும் போது, வரி மேலும் குறைய வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஓமன் என, உலக அளவில், 37 நாடுகளுடன், இந்தியா தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ளது. உலக மக்கள் தொகையில், 67 சதவீத பங்களிப்புடன் இருக்கும், 37 நாடுகளுடன் உருவாகியுள்ள ஒப்பந்தத்தால், இந்திய ஆடை ஏற்றுமதி அபார வளர்ச்சி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

