'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு கடன் சென்னை, கோவை, மதுரையில் முகாம் பதிவு செய்து பங்கேற்க அழைப்பு
'ஸ்டார்ட்அப்' நிறுவனங்களுக்கு கடன் சென்னை, கோவை, மதுரையில் முகாம் பதிவு செய்து பங்கேற்க அழைப்பு
ADDED : நவ 09, 2025 01:40 AM

சென்னை: தமிழகத்தில் உள்ள, 'ஸ்டார்ட்அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் வங்கி கடன் கிடைப்பதற்காக, சென்னை, மதுரை, கோவையில் முகாம்களை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் நடத்த உள்ளது.
தமிழகத்தில், தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில், 12,171 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்படுகின்றன. சந்தை வாய்ப்பு, கடனுதவி உள்ளிட்டவை கிடைக்க, அவை சிரமப்படுகின்றன.
எனவே, ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை, தமிழக அரசின் ஸ்டார்ட்அப் டி.என்., நிறுவனம் செய்கிறது. அதன்படி, வங்கி கடன் கிடைப்பதற்காக சென்னை, கோவை, மதுரையில் சிறப்பு முகாம் நடத்த உள்ளது.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
வங்கிகள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இடையே தொடர்பை ஏற்படுத்த, இந்த முகாம் நடத்தப்படுகிறது.
இதில், பல்வேறு வங்கிகள் பங்கேற்கும். தொழில் கடனுக்கு விண்ணப்பம் செய்வது தொடர்பாக இதில் வழிகாட்டப்படும்.
ஸ்டார்ட்அப்கள் தங்களின் தொழில் திட்டங்களை, வங்கிகளிடம் தெரிவித்து, கடன் பெறலாம். பதிவு செய்பவர்களுக்கு முகாம் நடக்கும் நாள், இடம் ஆகிய விபரங்கள் தெரிவிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பதிவு செய்ய...
சென்னை 'form.s tartuptn.in/BCCE'
கோவை 'form.s tartuptn.in/ FSCC'
மதுரை 'form.s tartuptn.in/BCMDU'

