ADDED : நவ 09, 2025 01:36 AM

திருப்பூர்: புதிய பருத்தி சீசன் துவங்கியுள்ள நிலையில், அக்., மாதம் 13.85 லட்சம் பேல், பஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது; அதிகபட்சமாக, ஆந்திராவில் இருந்து, 2.38 லட்சம் பேல் விற்கப்பட்டுஉள்ளது.
நம் நாட்டில், அக்டோபர் முதல் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை பருத்தி சீசனாக கருதப்படுகிறது. புதிய பருத்தி சீசன் துவங்கிய இரண்டாவது வாரத்தில் இருந்தே பஞ்சு வரத்து படிப்படியாக துவங்கியுள்ளது.
கடந்தாண்டு அக்., மாதம், 17.52 லட்சம் பேல் பஞ்சு (ஒரு பேல் 170 கிலோ) விற்பனைக்கு வந்திருந்தது; இந்தாண்டு, 13.85 லட்சம் பேல் பதிவாகியுள்ளது.
பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களை உள்ளடக்கிய வடக்கு மண் டலத்தில், கடந்த அக்., மாதம், 3.25 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது.
குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிராவை உள்ளடக்கிய மத்திய மண்டலத்தில் இருந்து, 4.24 லட்சம் பேல் பதிவாகியுள்ளது.
ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, தமிழகத்தை உள்ளடக்கிய தெற்கு மண்டலத்தில், 6.36 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் மட்டும், ஆந்திராவில் இருந்து, 2.38 லட்சம் பேல், கர்நாடகாவில் இருந்து, 2.37 லட்சம் பேல் விற்பனைக்கு வந்துள்ளது. பஞ்சு வரத்து துவங்கியுள்ளதால், விலை ஒரு கேண்டிக்கு (375 கிலோ), 500 முதல், 700 ரூபாய் வரை குறைந்து வருகிறது.
தீபாவளிக்கு பின்
கொள்முதல் குறைவு
தமிழ்நாடு ஸ்பின்னிங் மில்ஸ் அசோசியேஷன் தலைமை ஆலோசகர் வெங்கடாசலம் கூறுகையில், ''பருத்தி சீசன் துவங்கிய முதல் மாதத்தில், வரத்து குறைவாகவே இருக்கும்; டிச., முதல் மார்ச் மாதம் வரை வரத்து அதிகரிக்கும். உள்நாட்டு ஜவுளி உற்பத்தியில், தீபாவளிக்கு பின் மந்தநிலை நீடிக்கிறது. ''பஞ்சு கொள்முதல் வேகமெடுக்கவில்லை. தற்போது, புதிய பஞ்சு வரத்தும் துவங்கியுள்ளதால், விலை குறைந்துள்ளது. கடந்த, 7ம் தேதி நிலவரப்படி, ஒரு கேண்டி பஞ்சு, 52,000 முதல், 53,000 ரூபாய் வரை விற்கப்பட்டது,'' என்றார்.

