ADDED : பிப் 20, 2025 10:47 PM

சென்னை:தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், புதிய தொழில்முனைவோர் உள்ளிட்டோருக்கு, 'டிக்' எனப்படும் தமிழக அரசின் தொழில் முதலீட்டு கழகம் கடன் வழங்குகிறது. மொத்த கடனில் 90 சதவீதம், சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த கடன்களுக்கு, அரசின் மானிய சலுகைகளும் வழங்கப்படுகின்றன.
டிக் நிறுவனம் சிப்காட் நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில், கடன் முகாம்களை நடத்தி, நிறுவனங்களுக்கு கடன் வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தொழில் பூங்காவில் இன்று கடன் முகாம் நடத்தப்படுகிறது.
இதில், தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண்ராய், 'சிப்காட்' மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று, தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் பணியை துவக்கி வைக்கின்றனர்.
மேலும், அந்த தொழில் பூங்காவில் செயல்படும் தொழில் நிறுவனங்களின் குறைகளை கேட்பதுடன், கிருஷ்ணகிரி அமுதகொண்டபள்ளி யில் உள்ள டிட்கோவின், 'டேன்ப்ளோரா' நிறுவனத்தில் ரோஜா மலர் நடவு பணிகளையும் ராஜா மற்றும் அதிகாரிகள் குழு ஆய்வு செய்ய உள்ளது.