ADDED : டிச 10, 2024 07:25 AM

சென்னை : வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, நவம்பர் மாதத்திற்கான வாகன விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. கடந்த மாதத்தில் வாகன விற்பனை, 11.21 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதாவது, கடந்த நவம்பரில் 28.85 லட்சம் வாகனங்கள் விற்பனை ஆன நிலையில், இந்த நவம்பரில், 32.08 லட்சம் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் சி.எஸ்.விக்னேஸ்வர் பேசியதாவது:
பண்டிகை மாதத்தை தொடர்ந்து, திருமண காலம் வருவதால், நவம்பர் மாத வாகன விற்பனை நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என, முகவர்கள் தெரிவிக்கின்றனர். இருசக்கர வாகனங்களுக்கு கிராமப்புற விற்பனை ஆதரவாக இருந்தாலும், திருமணம் தொடர்பான விற்பனைகள் தொடர்ந்து குறைகின்றன. டிராக்டர் விற்பனை, 29.88 சதவீதம் உயர்ந்துள்ளது.
கடந்த மாதத்தில், இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் விற்பனையில், வளர்ச்சி இருந்தது. ஆனால், பயணியர் கார் மற்றும் வர்த்தக வாகன விற்பனை சரிந்துள்ளது.
பயணியர் கார் விற்பனை சரிவுக்கு, பலவீனமான சந்தை, குறைந்த கார் வகை மற்றும் போதுமான புதிய கார்கள் அறிமுகமாகாதது ஆகியவை, முக்கிய காரணங்களாக முகவர்கள் கூறுகின்றனர். என்னதான் கார் இருப்பு அளவு, 10 நாட்கள் குறைந்து, 65 முதல் 68 நாட்களாக இருந்தாலும், இந்த அளவு சற்று அதிகம் தான்.
வர்த்தக வாகன விற்பனை சரிவுக்கு குறைவான வாகன தேர்வுகள், போதுமான நிதி வசதி மற்றும் பண்டிகைகள் இல்லாதது முக்கிய காரணங்களாக உள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.