ஜெர்மனியில் தொழில் வாய்ப்பு சென்னையில் அலுவலகம் அமைகிறது
ஜெர்மனியில் தொழில் வாய்ப்பு சென்னையில் அலுவலகம் அமைகிறது
ADDED : டிச 07, 2024 01:10 AM

சென்னை:ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள், குறிப்பாக, விமான தொழில் துறையைச் சேர்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா தலைமையில், 'டிட்கோ' மற்றும் வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழு ஜெர்மனி சென்று உள்ளது.
இக்குழு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, ஜெர்மனி நாட்டில் உள்ள சாக்சனி மாகாண அரசுடன் பேச்சு நடத்தியது. இதன் விளைவாக, அம்மாகாண அரசு தமிழகத்தில் தன் அலுவலகத்தை துவக்க உள்ளது.
இந்த அலுவலகத்தை சாக்சனி பிரதிநிதிகளே நடத்துவர். இதன் வாயிலாக, ஜெர்மனியில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழகத்திலும், தமிழகத்தில் உள்ள நிறுவனங்கள் ஜெர்மனியிலும் தொழில் செய்ய வாய்ப்பு ஏற்படும்.
இது குறித்து, அமைச்சர் ராஜா விடுத்துள்ள அறிக்கை:
தமிழகம் மற்றும் ஜெர்மனி இடையே வர்த்தக உறவை ஏற்படுத்த, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. மேலும் நேரடியாக ஜெர்மனிக்கு சென்றதன் விளைவாக, சாக்சனி மாகாணம், சென்னையில் பிரதிநிதிகளை நியமிக்கிறது. அதன் அலுவலகம் வர்த்தகத்தை வளர்ப்பதற்கான நோக்கமாக மட்டுமல்லாமல்; மேம்பட்ட உற்பத்தி, தொழில்நுட்பம், ஆராய்ச்சி ஆகியவற்றில் புதிய வாய்ப்புகளையும் ஏற்படுத்தும்.
வரும் 2025ல் சாக்சனி குழுவை தமிழகத்தில் வரவேற்கவும், அவர்களின் சென்னை அலுவலகத்தை திறப்பதற்கும் காத்திருக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.