வருமான வரி துறை கவனத்தை ஈர்க்கக்கூடிய ரொக்க பரிவர்த்தனைகள்!
வருமான வரி துறை கவனத்தை ஈர்க்கக்கூடிய ரொக்க பரிவர்த்தனைகள்!
UPDATED : ஏப் 20, 2025 06:53 PM
ADDED : ஏப் 20, 2025 06:45 PM

வருமான வரித்துறை அதிக மதிப்பிலான ரொக்க பரிவர்த்தனைகளை கண்காணித்து வருகிறது. அதே நேரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளையும் கவனித்து வருகிறது. வருமானத்திற்கும், செலவுகளுக்குமான தொடர்பை அறிய நவீன நுட்பங்களையும் பயன்படுத்துகிறது.
வங்கி அறிக்கை தவிர, ரியல் எஸ்டேட் பரிவர்த்தனை,பயண ஆவணங்கள் உள்ளிட்ட பல தரவுகளை பரிசீலிக்கிறது. வருமானத்திற்கு பொருத்தமாக செலவுகள் அமையாத போது, நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் செய்கிறது. வருமான வரித்துறை கவனத்தை ஈர்க்கக்கூடிய முக்கிய ரொக்க பரிவர்த்தனைகளை பார்க்கலாம்.
சேமிப்பு கணக்கு:
வங்கி சேமிப்பு கணக்கில் ரொக்கமாக அதிக தொகை டெபாசிட் செய்வதை வருமான வரித்துறை கவனத்தில் கொள்கிறது. சேமிப்பு கணக்கில் ஆண்டுக்கு மொத்தமாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்தால், வருமான வரித்துறை விசாரிக்கலாம். சரியான ஆதாரங்கள் இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும்.
வைப்பு நிதி:
வங்கிகளில் ரொக்கமாக வைப்பு நிதி முதலீடு செய்யும் போதும் கவனமாக இருக்க வேண்டும். ஆண்டுக்கு மொத்தமாக 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக டிபாசிட் செய்தால், வருமான வரித்துறை கண்காணிப்புக்கு உள்ளாகலாம். பணத்திற்கான ஆதாரம் தெளிவாக இருக்க வேண்டும்.
பங்கு முதலீடு:
பங்குகள், மியூச்சுவல் பண்ட்கள், கடன் பத்திரங்கள் ஆகியவற்றை ரொக்கம் கொண்டு வாங்கும் போது வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் ரொக்கமாக முதலீடு செய்யும் போது, வருமான
வரித்துறை கவனத்திற்கு உள்ளாகலாம்.
கிரெடிட் கார்டு:
கிரெடிட் கார்டு பில் தொகை பொதுவாக காசோலையாக செலுத்தப்படுகிறது. மாறாக, ரொக்கமாக செலுத்தும் போது, மாதந்தோறும் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாகசெலுத்தினால் கவனம் தேவை. இவ்வாறு தொடர்ந்து நிகழும் போது, பணம் வரும் விதம் தொடர்பாக சந்தேகம் எழலாம்.
ரியல் எஸ்டேட்:
ரியல் எஸ்டேட் வாங்கும் போதும், ரொக்கமாக பணம் செலுத்தினால், குறிப்பிட்ட வரம்பிற்கு மேல் இருந்தால், பணத்திற்கான ஆதார ஆவணங்கள் கோரப்படலாம். நகரங்களில் இந்த வரம்பு 30 லட்சமாக இருக்கிறது. சரியான ஆதாரம் இல்லை எனில் நடவடிக்கை எடுக்கப்படும்.

