ADDED : ஜூன் 14, 2026 02:20 AM

சென்னை: தமிழகத்தில் நடப்பு சீசனில் முந்திரி உற்பத்தி 12 சதவீதம் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து இந்திய முந்திரி சங்கத்தின் செயலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது:
நாட்டின் முந்திரி உற்பத்தியில் தமிழகம் சுமார் 10 சதவீதம் பங்களிக்கிறது. அரியலுார், கடலுார், விழுப்புரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்கள் முந்திரி சாகுபடியில் முன்னணியில் உள்ளன. நடப்பு முந்திரி அறுவடை கடந்த ஏப்., மாதம் தொடங்கி மே மாதத்தோடு முடிவடைந்தது.
முந்திரி சாகுபடிக்கு ஏதுவான சூழல் நிலவியதால் முந்திரி விளைச்சல் சராசரியாக 58,000 டன் என்ற நிலையில் இருந்து 65,000 டன்னாக அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது மொத்த உற்பத்தியில் 12 சதவீதம் அதிகம்.
நாட்டில் பெரும்பான்மையான முந்திரி, இறக்குமதி செய்து பதப் படுத்தப்பட்டு மீண்டும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இது ஏற்றுமதியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றாலும், உற்பத்தி அதிகரிப்பு முந்திரி சாகுபடியாளர் களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
எதிர்பார்க்கப்பட்ட உற்பத்தி (கணிப்பு) 58,000 டன் உற்பத்தி 65,000 டன் சதவீதம் 12.07 சதவீதம்
கிலோ ரூ.1,000
விருத்தாசலத்தை சேர்ந்த விவசாயி கோட்டேரி சிவக்குமார் கூறுகையில், ''இந்தாண்டு முந்திரி விளைச்சல் அதிகம். ஆனால், விலை ஏற்றமும், இறக்கமும் இல்லாமல் நடுத்தரமாக இருந்தது. 1 மூட்டை (75 கிலோ) 13,000 ரூபாய் வரை விற்பனையானது. முந்திரி பருப்பு 1 கிலோ, 700 - 1,000 ரூபாய் வரை விற்பனையானது,'' என்றார்.
