ADDED : ஜன 10, 2025 01:55 AM

புதுடில்லி, ஜன. 10-
தேவை குறைந்ததால், இந்தியாவின் மொபைல் போன்களின் உற்பத்தி திறனில், கிட்டத்தட்ட பாதியளவு பயனின்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசின் பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் பல நிறுவனங்கள் துவங்கப்பட்டதால், இந்தியாவில் மொபைல் போன்கள் உற்பத்தி திறன் அதிகரித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் உலக அளவில் மொபைல் போன் தேவை குறைந்து வருவதால், அதில் கிட்டத்தட்ட பாதியளவு திறன் மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பீச்சர் போன்கள் மற்றும் துவக்கநிலை போன்களுக்கான தேவை குறைந்து வருவதே இதற்கு முக்கிய காரணம் என்று, சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டின் இறுதியில், இந்தியாவின் மொபைல் போன்களின் உற்பத்தி திறன், ஆண்டுக்கு 50 கோடி யூனிட்டுகளுக்கு மேல் இருந்ததாக ஆய்வு நிறுவனமான கவுன்டர் பாயின்ட் ரிசர்ச் தரவுகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, 'எல்சினா' எனப்படும் இந்திய மின்னணு தொழில்கள் சங்கம், 40 முதல் 42 கோடி யூனிட்டுகளுக்கு சற்று குறைந்த வரம்பை மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும், உண்மையான உற்பத்தி ஆண்டுக்கு கிட்டத்தட்ட 25 கோடி யூனிட்டுகளாகவே உள்ளது. இதில், 20 கோடி யூனிட்டுகள் உள்நாட்டு தேவைக்கும், மீதமுள்ள 5 கோடி யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இதில், பெருபான்மை யானவை, ஐபோன்கள் என்று அறிக்கை கூறுகிறது.
டிக்ஸன் டெக்னாலஜிஸ், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ், டாடா எலக்ட்ரானிக்ஸ், ஹான் ஹை எனப்படும் பாக்ஸ்கான் போன்ற பி.எல்.ஐ., தகுதி பெற்ற உற்பத்தியாளர்கள் உற்பத்தியை முன்னெடுத்து வருகின்றனர்.