ADDED : மார் 26, 2025 11:53 PM

சென்னை:நடப்பு நிதியாண்டின் கடைசி மாதம் என்பதால், விற்பனை இலக்கை எட்டுவதற்காக நிறுவனங்கள் இடையேயான போட்டி அதிகரித்ததால், மார்ச் மாதத்தில், நாட்டின் பிற மண்டலங்களை விட, தெற்கு மண்டலத்தில் சிமென்ட் விலை மூட்டைக்கு 10 ரூபாய் வரை குறைந்துள்ளது.
நாடு முழுதும் மார்ச் மாதத்தில் சராசரியாக 50 கிலோ எடை கொண்ட சிமென்ட் மூட்டை விலை 1 ரூபாய் குறைந்து, 366 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கிழக்கு மண்டலத்தில் மட்டும் சிமென்ட் மூட்டை ஒன்று அதிகபட்சமாக 9 ரூபாய் அதிகரித்துள்ளது. தெற்கு மண்டலத்தில் 7 ரூபாய் குறைந்தும், மத்திய, மேற்கு மண்டலத்தில் 4 ரூபாய் குறைந்தும் விற்பனையாகிறது. வடக்கு மண்டலத்தில், கடந்த மாத விலையிலேயே நீடிக்கிறது.
தென் மாநிலங்களைப் பொறுத்தவரை, சிமென்ட் விலை, மார்ச்சில் தமிழகம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஒரு மூட்டைக்கு 10 ரூபாய் குறைந்தது. கேரளாவில் சிமென்ட் மூட்டைக்கு 5 ரூபாயும், கர்நாடகாவில் எவ்வித மாற்றமின்றியும் விற்பனையாகி வருகிறது.
தற்போதைய சிமென்ட் விலை சரிவு தற்காலிகமானது. இருப்பினும், தேவை வலுவாக இருப்பதால், வரும் நிதியாண்டின் முதல் காலாண்டில், சிமென்ட் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என, சிமென்ட் உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.