ஏற்றுமதிக்கு வட்டி மானியம் அறிவிக்கிறது மத்திய அரசு
ஏற்றுமதிக்கு வட்டி மானியம் அறிவிக்கிறது மத்திய அரசு
ADDED : நவ 27, 2025 11:56 PM

புதுடில்லி: மத்திய அரசு வட்டி சமன்பாட்டு திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்களுக்கு 2.50 - 3.00 சதவீதம் வட்டி மானியம் வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட்டி சமன்பாட்டு திட்டம் கடந்த 2015ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், ஏற்றுமதியாளர்கள் பெறும் கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டியில் ஒரு பகுதியை மத்திய அரசு மானியமாக வழங்கும்.
கடந்தாண்டு டிசம்பர் மாதத்துடன் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. இதை மீண்டும் தொடங்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தி வந்த நிலையில், அமெரிக்க வரி விதிப்புக்கு பின் இந்த கோரிக்கை வலுப்பெற்றது.
இந்திய ஏற்றுமதியாளர்களுடன் போட்டி போடும் நாடுகளில், கடன் வட்டி 2 - 3 சதவீதமாகவே இருப்பதாகவும், ஆனால் நம் நாட்டில் 8 - 12 சதவீதம் வசூலிக்கப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 12ம் தேதி 25,060 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இத்திட்டத்தின் ஒரு பகுதியாக 2.50 - 3.00 சதவீதம் வரை வட்டி மானியம் வழங்க மத்திய அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான விபரங்கள் அடுத்த வாரம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு ஏற்றுமதியாளருக்கு ஆண்டுக்கு அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரை வட்டி மானியம் வழங்கப்படும் என தகவல்
வட்டி மானியம் வழங்கினால், அரசுக்கு ஆண்டுக்கு 3,200 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு

