சவால்களை சமாளித்து பொருளாதாரம் வளரும்: நிதியமைச்சக ஆய்வறிக்கை தகவல்
சவால்களை சமாளித்து பொருளாதாரம் வளரும்: நிதியமைச்சக ஆய்வறிக்கை தகவல்
ADDED : நவ 27, 2025 11:55 PM

புதுடில்லி: 'ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, நுகர்வை அதிகரித்ததுடன், நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் சவால்களை சமாளித்து தொடர்ந்து வளர்ச்சி காணும்' என, மத்திய நிதியமைச்சகத்தின் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பணவீக்கம் குறைந்து வருவதுடன், சமீபத்திய ஜி.எஸ்.டி., குறைப்பு காரணமாக குடும்பங்களின் செலவிடும் திறன் அதிகரித்து, பொருட்கள் நுகர்வு வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த அக்டோபரில் சில்லரை விலை பணவீக்கம், இதுவரை இல்லாத அளவுக்கு 0.25 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த செப்டம்பரில் இது, 1.44 சதவீதமாக இருந்தது.
இதற்கு, ஜி.எஸ்.டி., குறைப்பின் தாக்கம், முந்தைய ஆண்டின் அடிப்படை விகிதம் மற்றும் குறிப்பிடத்தக்க அளவில் உணவு பொருட்கள் விலை குறைந்தது ஆகியவை, மிகப்பெரிய பங்களிப்பை வழங்கி உள்ளன. ஜி.எஸ்.டி., விகிதம் மறுசீரமைப்பு, நுகர்வை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றி உள்ளது.
இது வாகனங்கள் விற்பனை, யு.பி.ஐ., பரிவர்த்தனை மதிப்பு அதிகரிப்பு, டிராக்டர் விற்பனை உள்ளிட்ட பொருளாதார தரவுகளில் பிரதிபலித்துள்ளன. இவை, கிராமம் மற்றும் நகரங்களில் பரவலாக தேவை அதிகரித்திருப்பதை காட்டுகிறது.
இதன் முழு தாக்கம், அடுத்த இரண்டு காலாண்டுகளில் மக்களின் செலவிடும் போக்கு வாயிலாக தெரியவரும்.
பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, அரசின் மூலதன செலவுகள் அதிகரிப்பு மற்றும் மக்களின் தேவை அதிகரிப்பு காரணமாக இந்திய பொருளாதாரம் சவால்களை சமாளித்து தொடர்ந்து வளர்ச்சி அடையும்.
நிறுவனங்களின் செயல்பாடு வலுவாக இருக்கும் என்பதால், நீடித்த லாபம், நிலையான நிதிநிலை அறிக்கை தொடரும். உள்நாட்டு நிதி சந்தை, நிறுவனங்களின் பங்கேற்பால் மேலும் வளர்ச்சி காணும்.
புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளதால், தொழிலாளர்கள் நலன், சூழல் மேம்படும்.
இரண்டாவது காலாண்டில் ஜி.டி.பி., வளர்ச்சி, 7 - 7.75 சதவீதமாக இருக்கும் என பொருளாதார மதிப்பீடுகளில் கணிப்பு
வர்த்தக கொள்கை மாற்றம், புவிசார் பதற்றங்கள், சந்தை ஊசலாட்டங்கள் போன்ற உலகளாவிய நிச்சயமற்றத் தன்மை, ஏற்றுமதி, முதலீடுகள், முதலீட்டாளர் நம்பிக்கைக்கு அச்சுறுத்தல்.

