ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ரூ.7,295 கோடி சலுகை திட்டம் மத்திய அரசு வட்டி மானியம், பிணை உத்தரவாதம்
ஏற்றுமதியாளர்களுக்கு உதவ ரூ.7,295 கோடி சலுகை திட்டம் மத்திய அரசு வட்டி மானியம், பிணை உத்தரவாதம்
ADDED : ஜன 03, 2026 01:44 AM

புதுடில்லி: ஏற்றுமதியாளர்களுக்கு எளிதில் கடன் கிடைக்கும் வகையில் 7,295 கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகை திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தக அமைச்சக கூடுதல் செயலர் அஜய் பதுா தெரிவித்ததாவது:
ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் நோக்கில் அரசு அறிவித்துள்ள திட்டத்தின்படி, 5,181 கோடி ரூபாய் வட்டி மானியம் வழங்கப்படும். மேலும் 2,114 கோடி ரூபாய் பிணையாக உறுதி அளிக்கப்படும். இது, 2025 முதல் 2031 வரை ஆறு ஆண்டுகால திட்டமாகும்.
ஏற்றுமதிக்கு சரக்கை அனுப்பும் முன்பும், அனுப்பிய பின்பும் என்று இரண்டு கட்டங்களிலும் பெறப்படும் கடன்களுக்கு வட்டி மானிய உதவியை ஏற்றுமதியாளர்கள் பெறலாம்.
கடந்தாண்டு நவம்பரில் இ.பி.எம்., எனும் ஏற்றுமதி மேம்பாட்டு திட்டம் 25,060 கோடி ரூபாய் மதிப்பில் அறிவிக்கப்பட்டது. அதன் இரண்டாவது பகுதியாக தற்போது இத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
முதல்கட்டமாக, ஏற்றுமதியாளர்கள் சந்தையை அணுக, 4,531 கோடி ரூபாய் ஆதரவு திட்டம் கடந்தாண்டு டிச., 31ல் அறிமுகமானது. இத்திட்டத்தின்கீழ் எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்களுக்கு 2.75 சதவீத கடன் வட்டி மானியம் கிடைக்கும். அதிகபட்சமாக ஒரு ஏற்றுமதியாளருக்கு ஆண்டுக்கு 50 லட்சத்துக்கு மிகாமல் இந்த மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தை ரிசர்வ் வங்கியும் வெளிநாட்டு வர்த்தகத்துக்கான இயக்குநர் ஜெனரல் அலுவலகமும் இணைந்து செயல்படுத்தும்.
ஏற்றுமதி கடன்களுக்கான 2,114 கோடி ரூபாய் பிணை உத்தரவாத திட்டத்தின்கீழ் எம்.எஸ்.எம்.இ., ஏற்றுமதியாளர்கள் பயன் பெறலாம். அவர்களது நடைமுறை மூலதன கடன்களுக்காக ஒரு நிறுவனத்துக்கு, தலா 10 கோடி ரூபாய் வரை பிணை உத்தரவாதம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

