நாட்டின் முதல் ஏ.ஐ., மாடல் 'சர்வம்' ஸ்டார்ட்அப் தயாரிக்கிறது மத்திய அரசு அறிவிப்பு
நாட்டின் முதல் ஏ.ஐ., மாடல் 'சர்வம்' ஸ்டார்ட்அப் தயாரிக்கிறது மத்திய அரசு அறிவிப்பு
ADDED : ஏப் 28, 2025 12:27 AM

புதுடில்லி:இந்தியாவின் முதல் ஏ.ஐ., மாடலை உருவாக்குவதற்காக 'சர்வம் ஏ.ஐ.,' என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது.
உள்நாட்டிலேயே ஏ.ஐ., மாடலை உருவாக்குவதற்காக மத்திய அரசின் 'இந்தியா ஏ.ஐ., மிஷன்' திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
மொத்தம் 67 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், பல கட்ட பரிசீலனைக்கு பிறகு பெங்களூருவைச் சேர்ந்த சர்வம் ஏ.ஐ., நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்துக்கு ஏ.ஐ., மாடல்களை உருவாக்குவதற்கு தேவையான சிப்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை மத்திய அரசு வழங்கும்.
சர்வம் நிறுவனம் அதன் ஏ.ஐ., மாடல்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக, முதல் ஆறு மாதங்களுக்கு 4,000 ஜி.பி.யு.,க்கள், அதாவது சிப்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஜி.பி.யு., வழங்குவதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்வு செய்த நிறுவனங்கள், தேவையான சிப்களை வழங்க உள்ளன.
நிறுவனம் உருவாக்க உள்ள ஏ.ஐ., மாடல் அனைத்து இந்திய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்ற வகையில் பயிற்றுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வம் நிறுவனம் வெவ்வேறு விதமான பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு மூன்று ஏ.ஐ., மாடல்களை உருவாக்க உள்ளது.
மிகக் குறைவான செலவில் 'டீப் சீக்' என்ற ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்தி, செயற்கை நுண்ணறிவு துறையில் சீனா புரட்சியை ஏற்படுத்திஉள்ள நிலையில், வெகு விரைவில் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஏ.ஐ., மாடலை அறிமுகப்படுத்த மத்திய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிறது.
இதற்காகவே 10,370 கோடி ரூபாய் மதிப்பிலான இந்தியா ஏ.ஐ., மிஷன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
சர்வம் நிறுவனத்தை தொடர்ந்து இன்னும் சில நிறுவனங்களை தேர்வு செய்வதற்கான பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.

