சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
சர்க்கரை குறைந்தபட்ச விற்பனை விலை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலனை
ADDED : நவ 18, 2025 11:54 PM

புதுடில்லி:சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்குமாறு வந்துள்ள கோரிக்கைகளை பரிசீலித்து, விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதாக, மத்திய உணவுத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:
மத்திய அரசு, 2025--26 சந்தை ஆண்டில் (அக்டோபர்--செப்டம்பர்) 15 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்து உள்ளது. கடந்த 2024--25ல் விலை நிலையாக இருந்ததை அடுத்து, 10 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய அனுமதியளித்தோம்.
ஏற்றுமதி, அதன் விலையில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆராயப்படும். அதன் அடிப்படையில் அதன் குறைந்தபட்ச விற்பனை விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
குறைந்தபட்ச சர்க்கரை விற்பனை விலை, கிலோவுக்கு 31 ரூபாயாக உள்ளது. 2019ல் நிர்ணயிக்கப்பட்ட பிறகு, அதன் விலை உயர்த்தப்படவில்லை. தயாரிப்பு செலவு உயர்ந்து விட்டதால், இதனை கிலோவுக்கு 40 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என்று இந்திய சர்க்கரை உற்பத்தியாளர் சங்கமான 'இஸ்மா' கோரி வருகிறது.
கரும்பு விலை 2025-- -26ல் குவின்டாலுக்கு 355 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முன்பு 275 ரூபாயாக இருந்தது. அதாவது, 29 சதவீத உயர்வின் விளைவாகவும், சர்க்கரை உற்பத்திச் செலவு அதிகரித்து, ஒரு கிலோ 40.24 ரூபாயாக உள்ளதாக, இவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
சர்க்கரைக்கான குறைந்தபட்ச விற்பனை விலை கிலோ ரூ.31 ஆக உள்ளது
தயாரிப்பு செலவால் கிலோ ரூ.40 ஆக உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை

