கோவையில் 'பம்ப்செட்' ஆராய்ச்சி மத்திய அரசு நிதியில் மேம்பாட்டு திட்டம்
கோவையில் 'பம்ப்செட்' ஆராய்ச்சி மத்திய அரசு நிதியில் மேம்பாட்டு திட்டம்
ADDED : ஜன 11, 2025 12:58 AM

கோவை:சர்வதேச அளவில் போட்டியிடவும், ஏற்றுமதியை உயர்த்தவும், 10 கோடி ரூபாயில் கோவையில் பம்ப்செட் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்படுவதாக, இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் அறிவியல், தொழிற்சாலை பரிசோதனைகள் மற்றும் ஆராய்ச்சி மையமான சிடார்க், தென்னிந்திய இன்ஜினியரிங் உற்பத்தியாளர் சங்கமான சீமா ஆகியவை இணைந்து இத்திட்டத்தை, 2019ல் துவங்கின.
முதல் கட்டமாக 8.41 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஸ்மார்ட் பம்ப் சிறப்பு தொழில்நுட்ப மையம் அமைக்க, மத்திய கனரக தொழில்கள் அமைச்சகம், 6.71 கோடி ரூபாய் நிதி வழங்கியது. இதில், சப்மெர்சிபிள் பம்ப் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக, 4 கோடி ரூபாய் செலவில், சேற்றில் இயங்கும் பம்ப் மேம்பாட்டிற்கு, நிதி பெறப்பட்டு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதுவும் நிறைவு பெறும் தருவாயில் உள்ளது.
இந்திய பம்ப் உற்பத்தியாளர் சங்கமான இப்மாவின் தலைவர் கார்த்திக் கூறுகையில், ''சர்வதேச அளவில், இந்திய பம்ப்கள் போட்டியிடும் வகையில், இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு நிதியுதவியுடன், கோவையில் உள்ள பம்ப் நிறுவனங்கள் இத்திட்டத்தில் பயன்பெற்று வருகின்றன.
''இரண்டாவது கட்டமாக செயல்படுத்தப்படும் திட்டத்தில், சுரங்கம், அணைக்கட்டுகள், நீர்த்தேக்கங்களில், சேறு அகற்றும் பெரிய அளவிலான பம்ப் செட் உருவாக்கும் ஆராய்ச்சிகள் இடம் பெற்றன.
''இந்த வகை பம்புகளை, தற்போது இறக்குமதி செய்து வருகிறோம். இந்தியாவிலேயே இவற்றை உருவாக்கி, வெற்றி கண்டுள்ளோம். இந்த ஆராய்ச்சி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது,'' என்றார்.

