ADDED : அக் 08, 2024 11:33 PM

புதுடில்லி:பருப்பு வகைகளின் மொத்த விலை குறைந்துள்ளதை அடுத்து, அந்த பயனை மக்களுக்கு வழங்கும் வகையில் சில்லரை விலையை குறைக்குமாறு வர்த்தகர்களை
மத்திய அரசு வலியுறுத்திஉள்ளது.
இதுதொடர்பாக விவாதிக்க மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை செயலர் நிதி கரே தலைமையில், சில்லரை வர்த்தகர்கள் கூட்டமைப்புடன் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.கூட்டத்துக்கு பிறகு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பருப்பு வகைகளின் இருப்பு நிலை மற்றும் வலுவான கரீப் பருவ விதைப்பு ஆகியவற்றின் காரணமாக, பருப்பு வகைகளின் மொத்த விலை குறைந்துள்ளது.கடந்த மூன்று மாதங்களில் மட்டும் துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு மொத்த விலை கிட்டத்தட்ட 10 சதவீதம் சரிந்துள்ளது. ஆனால் இவற்றின் சில்லரை விலையில், பெரிய அளவிலானமாற்றங்கள் இல்லை.வர்த்தகர்கள் தொடர்ந்து அதிக லாபம் சம்பாதித்து வருகின்றனர்.
மொத்த விலை குறைந்துள்ளதன் பயனை மக்களுக்கு வழங்குமாறு வர்த்தகர்களுக்கு வலியுறுத்தப்பட்டது. சில்லரை விலை நிலவரம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், தேவையான மாற்றங்களை மேற்கொள்ளாத வர்த்தகர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டது.மேலும், மத்திய அரசு மலிவு விலையில் வழங்கி வரும் பாரத் பிராண்டு பாசி பருப்பு, மசூர் பருப்புகளை, மக்களிடம் கொண்டு சேர்க்க
அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.