மின்னணு மேம்பாட்டு நிதி துவங்குகிறது மத்திய அரசு
மின்னணு மேம்பாட்டு நிதி துவங்குகிறது மத்திய அரசு
ADDED : நவ 16, 2025 01:26 AM
புதுடில்லி: நாடு முழுதும் மின்னணு பொருட்கள் துறையில் உள்ள ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு உதவுவதற்காக, மத்திய அரசு 257.77 கோடி ரூபாய் முதலீட்டில், மின்னணு மேம்பாட்டு நிதியை துவங்க உள்ளது.
இந்தியாவில் மின்னணு பொருட்கள் துறையில் புதுமை, தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்கும் நோக்கத்துடன், வரும் 2026, பிப்.15ல் மின்னணு மேம்பாட்டு நிதியை மத்திய அரசு துவங்க உள்ளது. இதன் வாயிலாக எலக்ட்ரானிக்ஸ், நானோ எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் தொழில்முனைவு ஆகியவை ஊக்குவிக்கப்பட உள்ளன.
மின்னணு மேம்பாட்டு நிதி, 9 தொழில்முறை வல்லுநர்களால் நிர்வகிக்கப்படும் எப்.ஓ.எப்.,பில் முதலீடு செய்யப்படும். அதில் இருந்து ஐ.ஓ.டி.,ரோபோட்டிக்ஸ் மற்றும் ட்ரோன்கள், தானியங்கி வாகனங்கள், ஆரோக்கிய தொழில்நுட்பம், சைபர் பாதுகாப்பு, ஏ.ஐ., மெஷின் லேர்னிங் துறையில் செயல்படும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு ஆதரவளிக்கப்பட உள்ளது.
இந்த நிதி வாயிலாக 128 ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கு ஆதரவளித்து, 23,600 வேலைகளை உருவாக்குவதோடு, 368 அறிவுசார் சொத்துரிமைகளை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

