பன்முக ஆலோசனை நிறுவனங்கள் உருவாக்க மத்திய அரசு திட்டம்
பன்முக ஆலோசனை நிறுவனங்கள் உருவாக்க மத்திய அரசு திட்டம்
ADDED : செப் 19, 2025 01:08 AM

புதுடில்லி:உலகளாவிய பன்முக ஆலோசனை நிறுவனங்களுக்கு மாற்றாக, பல்வேறு தொழில்முறை வல்லுனர்கள் அடங்கிய இந்திய பன்முக ஆலோசனை நிறுவனங்களை உருவாக்கும் திட்டத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.
இந்தியாவில் பிரைஸ்வாட்டர்ஹவுஸ் கூப்பர்ஸ், எர்னஸ்ட் அண்டு யங், கே.பி.எம்.ஜி., மெக்கன்ஸி போன்ற உலகளாவிய நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
இந்நிலையில், உள்நாட்டில் ஒரே குடையின் கீழ் பட்டய கணக்காளர்கள், நிறுவன செயலர்கள், வழக்கறிஞர்கள், ஆலோசகர்கள் அடங்கிய பன்முக ஆலோசனை நிறுவனங்கள் சந்தையில், இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி அடைவதுடன், உலகளாவிய சந்தையில் போட்டியிட மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய கார்ப்பரேட் விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
நம்நாட்டின் ஆலோசனை மற்றும் தணிக்கை நிறுவனங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்க அமைச்சர்கள் மட்டத்தில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
மத்திய கார்ப்பரேட் விவகார செயலர் தலைமையிலான இந்த குழுவிடம், வரும் 30ம் தேதி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.
சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் நிர்வாகம், தணிக்கை, ஆலோசனை, விதிகள், பன்முக ஆலோசனை, ஐ.டி., சேவைகள் ஆகிய துறைகளில், இந்திய நிறுவனங்களின் தேவை அதிகமாக உள்ளது. இது தொழில்முறை சேவைகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்கள் சார்ந்திருப்பை குறைத்து சுயசார்பை நோக்கி செல்லும் ஆத்மநிர்பர் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.