ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் நான்கு அடுக்கு திட்டம்! 50 நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு
ஏற்றுமதியாளர்களை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசின் நான்கு அடுக்கு திட்டம்! 50 நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு
UPDATED : ஆக 16, 2025 10:10 AM
ADDED : ஆக 16, 2025 01:13 AM

புதுடில்லி: ஏற்றுமதியாளர்களை, அமெரிக்க வரி விதிப்பு சுமையிலிருந்து பாதுகாக்க, நான்கு அடுக்கு திட்டத்தை, மத்திய வர்த்தக அமைச்சகம் வடிவமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் ஏற்றுமதியில் 90 சதவீதத்துக்கும் அதிகமாக பங்கு வகிக்கும் 50 நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகத்தில் நிச்சயமற்ற சூழல் தொடர்ந்தாலும், நாட்டின் ஏற்றுமதி பாதிக்கப்படாத வகையில், இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏற்றுமதி போட்டித்தன்மையை அதிகரிப்பது, விளம்பரப்படுத்துதலை வலுப்படுத்துவது, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகளை பல்வகைப்படுத்துவது ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்தப்பட உள்ளது.
கடந்தாண்டு ஏப்ரல் - ஜூலை காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டின் இதே காலத்தில் 26 நாடுகளுக்கான இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதில் கனடா, ஸ்பெயின், சீனா, ஹாங்காங் மற்றும் தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் அடங்கும். அதே நேரத்தில் துருக்கி, இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் நெதர்லாந்து உள்ளிட்ட 14 நாடுகளுக்கான ஏற்றுமதி சரிந்துள்ளது.
ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ள 50 நாடுகளில், 20 நாடுகள் மிகவும் முக்கியமானவை என, வகைப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 30 நாடுகள் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படாத நிலையில், ஆசிய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் வர்த்தக வளர்ச்சி அதிகமாக இருக்கும் என, உலக வர்த்தக அமைப்பு கணித்துள்ள நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து மத்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இந்திய ஏற்றுமதிகளுக்கு அதிக வாய்ப்பு வழங்கக் கூடிய 50 நாடுகள் மீது கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நாடுகள் அனைத்தும் பிற நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யும் நிலையில், இதில் இந்தியாவின் பங்கு குறைவாகவே உள்ளது.
எனவே இந்நாடுகளுக்கான ஏற்றுமதிகளை அதிகரிப்பது குறித்தும், பல்வகைப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே, வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் 28 புதிய சந்தைகளுக்கு 15 புதிய பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.
இறக்குமதி செய்யும் நாடுகளின் தரநிலைகளை பூர்த்தி செய்ய ஏதுவாக, சோதனை மற்றும் சான்றிதழ் முறைகளை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. பல்வேறு நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்த விவாதங்களை வேகப்படுத்துவதும், இந்த நான்கு அடுக்கு திட்டத்தின் முக்கிய அம்சமாகும். இந்தியா - ஐரோப்பா இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், வரும் அக்டோபர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரும். ஓமன் உடனான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாக உள்ளது.
பிரிட்டன் உடனான ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வந்த ஆறு மாதங்களில், பல்வேறு இந்திய பொருட்களுக்கான வரி விதிப்பு பூஜ்ஜியமாக குறையும். அதிக பணியாளர்களைக் கொண்ட துறைகளின் ஏற்றுமதிகள் இதனால் பயனடையும்.
அமெரிக்க சந்தையில் இழந்த வாய்ப்புகளை பிரிட்டனில் பிடிக்க முடியும். அமெரிக்க வரி விதிப்பால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய துறைகளுக்கு, மானியம் உட்பட நேரடி உதவிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.