சுவிட்ச் - சாக்கெட் உள்ளிட்டவற்றுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகிறது
சுவிட்ச் - சாக்கெட் உள்ளிட்டவற்றுக்கு தரச்சான்றிதழ் கட்டாயமாகிறது
ADDED : ஜன 05, 2024 11:40 PM

புதுடில்லி:தரமற்ற பொருட்களின் இறக்குமதியை குறைக்கவும், உள்நாட்டில் உற்பத்தியை அதிகரிக்கவும், மின்சார உபகரணங்களான சுவிட்ச் - சாக்கெட் - அவுட்லெட்கள் மற்றும் ஒயர்களை கொண்டு செல்ல பயன்படுத்தப்படும் கேபிள் டிரங்கிங்களுக்கு, கட்டாய தர விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து டி.பி.ஐ. ஐ.டி., எனப்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தெரிவித்துள்ளதாவது:
கடந்த 1ம் தேதி, மின்சார உபகரணங்களுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணைகளை அரசு வெளியிட்டுள்ளது.
இந்த உத்தரவின் கீழ், இந்திய தர நிர்ணய கழகத்தின், பி.ஐ.எஸ்., அடையாள சான்று இல்லாமல், மின்சார உபகரணங்களான சுவிட்ச் - சாக்கெட் - அவுட்லெட்கள் மற்றும் கேபிள் டிரங்கிங் பொருட்களை உற்பத்தி செய்யவோ, விற்கவோ, வர்த்தகம் செய்யவோ, இறக்குமதி செய்யவோ, இருப்பு வைக்கவோ கூடாது.
இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்களில், இந்த உத்தரவு அமலுக்கு வரும்.
மேலும், ஏற்றுமதிக்காக உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது.
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில், இந்த உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, சிறு தொழில் நிறுவனங்களுக்கு கூடுதலாக 9 மாதங்களும், குறு நிறுவனங்களுக்கு கூடுதலாக 12 மாதங்களும் வழங்கப்படும்.
பி.ஐ.எஸ்., சட்ட விதிமுறைகளை மீறினால், முதல் குற்றத்திற்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது குறைந்தபட்சம் 2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இரண்டாவது மற்றும் அடுத்தடுத்த குற்றங்களுக்கு, அபராதமாக குறைந்தபட்சம் 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.