ரசாயன பொருள் ஏற்றுமதி 18 மாதங்களாக கெடு நீட்டிப்பு
ரசாயன பொருள் ஏற்றுமதி 18 மாதங்களாக கெடு நீட்டிப்பு
ADDED : செப் 02, 2025 11:03 PM

புதுடில்லி:இறக்குமதி செய்யப்படும் ரசாயன பொருட்களுக்கான ஏற்றுமதி காலக்கெடுவை, ஆறு மாதங்களில் இருந்து 18 மாதமாக உயர்த்துவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கட்டாய தரக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ரசாயன பொருட்களின் ஏற்றுமதிக்கு மட்டுமே இது பொருந்தும்.
ரசாயன துறைக்கான மத்திய அரசின் முன்கூட்டிய அங்கீகாரம் வழங்கும் திட்டத்தின்படி, மூலப்பொருளாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களை, முழு உற்பத்தி முடிந்து ஆறு மாதத்துக்குள் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்ற விதி நடைமுறையில் உள்ளது. இந்நிலையில், இந்த காலக்கெடுவை 18 மாதங்களாக உயர்த்துவதாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் தான், ஜவுளித் துறைக்கு இத்திட்டத்தின் கீழ் இதே போன்று காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டது. முன்கூட்டிய அங்கீகார திட்டத்தின்படி, ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான மூலப் பொருள் இறக்குமதிக்கு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
இந்திய ஏற்றுமதியாளர்களின் உற்பத்தி செலவை குறைக்கவும், சர்வதேச அளவில் போட்டித் தன்மையை மேம்படுத்தவும், ஏற்றுமதி வளர்ச்சியை அதிகரிக்கவும் இந்த சலுகை வழங்கப்படுகிறது.
இந்திய சரக்கு ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கும் ரசாயன தொழில் துறையினருக்கு, மூலப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை இது உறுதி செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ல் 3.94 லட்சம் கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் ரசாயனத் துறை 10.60 சதவீதம் பங்கு.