சென்னை எலக்ட்ரிக்கல் கண்காட்சி புதிய சாதனங்கள் அணிவகுப்பு
சென்னை எலக்ட்ரிக்கல் கண்காட்சி புதிய சாதனங்கள் அணிவகுப்பு
ADDED : டிச 28, 2024 12:55 AM

சென்னை:'தமிழக எலக்ட்ரிக்கல் கன்சல்டன்ட்ஸ் அசோசியேஷன்' மற்றும், 'ஸ்மார்ட் எக்ஸ்போஸ்' சார்பில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'எலக்ஸ்போ' எனும் பெயரில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி, சென்னையில் நேற்று துவங்கியது. இக்கண்காட்சி நாளை வரை நடக்கிறது.
இதுகுறித்து, தமிழக எலக்ட்ரிக்கல் கன்சல்டன்ட்ஸ் அசோசியேஷன் தலைவர் பாலமுருகன் கூறியதாவது:
ஒரே சமயத்தில் 100 நிறுவனங்களுக்கு சென்று, அதன் தயாரிப்புகள் முழுதையும் பார்க்க முடியாது. ஆனால், அதற்கான ஒரு வாய்ப்பை ஏற்படுத்த, இந்த கண்காட்சி நடத்தப்படுகிறது.
இதில், 'சீமென்ஸ், எல் அண்டு கே., கிரீவ்ஸ்' போன்ற முன்னணி நிறுவனங்கள் உட்பட, 101 நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. அவற்றில், 'டிரான்ஸ்பார்மர், கன்ட்ரோல் பேனல், கேபிள், ஒயர்' என, அனைத்து வித எலக்ட்ரிக்கல் பொருட்களும் காட்சிக்கு இடம்பெற்றுள்ளன.
இதன் வாயிலாக பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள், இன்ஜினியர்கள் என அனைத்து தரப்பினரும், தங்களுக்குத் தேவையான பொருட்களை நேரில் ஆர்டர் செய்யலாம்.
கண்காட்சி வாயிலாக, 10 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்க வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழக சிறு மற்றும் குரு தொழில்கள் சங்கம் சார்பில் சோமக்ஸ் 2024 கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பார்சல்கள் ஏற்றுதல் மற்றும் இறக்குதல் கண்வேயர் இயந்திரம்.

