சென்னை துறைமுக விரிவாக்கம் ரூ.44,000 கோடிக்கு ஒப்பந்தங்கள்
சென்னை துறைமுக விரிவாக்கம் ரூ.44,000 கோடிக்கு ஒப்பந்தங்கள்
ADDED : அக் 31, 2025 03:30 AM

சென்னை:சென்னை துறைமுகத்தில் கூடுதல் கண்டெய்னர்கள் முனையம் அமைப்பது உட்பட பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள 44,000 கோடி ரூபாய் மதிப்பில் மும்பையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.
நாட்டின் மூன்றாவது பெரிய துறைமுகமாக சென்னை துறைமுகம் இருக்கிறது. இதில் புதிய கண்டெய்னர் முனையம் அமைக்கப்பட உள்ளது.
மும்பையில் நடந்து வரும் கடல்சார் மாநாட்டில் ஒரு பகுதியாக சென்னை துறைமுகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், ரைட்ஸ் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது குறித்து, சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
மும்பை மாநாட்டில் சென்னை துறைமுகத்தின் பல திட்டப்பணிகளை மேற்கொள்ளும் வகையில், 44,000 கோடி ரூபாய்க்கு பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
குறிப்பாக, ரைட்ஸ் நிறுவனம், போர்வீஸ் மஜார்ஸ் நிறுவனம் தலா 8,000 கோடியில் கூடுதல் கண்டெய்னர் முனையம் அமைக்க உள்ளன. 8,400 கோடி ரூபாயில், கூடுதலாக 10,000 சதுர மீட்டரில் பரப்பளவில் கார்கள் நிறுத்தம் அமைக்க எச்.எம்.ஐ.எல்., நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதேபோல், சமையல் எண்ணெய் சேமிப்பதற்கான கிடங்குகளை அமைக்க மூன்று தனியார் நிறுவனங்களுடனும் ஒப்பந்தம் செய்துள்ளோம். மேற்கண்ட ஒப்பந்தங்களை இறுதி செய்ய, தனியாக ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும்.   அதன்பிறகே, பணிகள் துவங்கி செயல்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

