சென்னையிலிருந்து ஹாங்காங், மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் துவங்குகிறது
சென்னையிலிருந்து ஹாங்காங், மொரீஷியஸ் விமான சேவை மீண்டும் துவங்குகிறது
ADDED : ஜன 30, 2024 10:55 AM
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக நிறுத்தப்பட்ட சென்னை - ஹாங்காங், சென்னை - மொரீஷியஸ் இடையேயான விமான சேவை, நான்கு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் துவங்கப்பட உள்ளது.
கொரோனாவுக்கு முன் கடந்த 2019ம் ஆண்டு அக்., மாதத்தில் சென்னை விமான நிலையத்தின் விமான சேவை, நாள் ஒன்றுக்கு 501 விமானங்கள் என்ற அளவில் இருந்தது.
கொரோனாவுக்கு பின், விமான சேவைகள் மீண்டும் அதிகரித்து வந்தாலும், இதுவரையில் தினமும் 400 விமான சேவைகள் எனும் அளவில்தான் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை - ஹாங்காங் இடையே இயக்கப்பட்டு வந்த, 'கதே பசிபிக் ஏர்லைன்ஸ்' விமான நிறுவனம், நான்கு ஆண்டுகளுக்கு பின், அடுத்த மாதம் முதல் வாரத்தில் இருந்து சேவையை மீண்டும் வழங்க உள்ளது.
ஆரம்பத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும்; பயணியர் வரவேற்பை பொறுத்து, தினசரி இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இதேபோல், சென்னையில் இருந்து மொரீஷியஸ் நாட்டிற்கான 'ஏர் மொரீஷியஸ்' விமான சேவைகள், நான்கு ஆண்டுகளுக்கு பின், வரும் ஏப்., மாதத்தில் முதல் மீண்டும் துவங்க உள்ளதாக, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.