அரிய வகை காந்தம் இறக்குமதி உரிமம் வழங்க தாமதிக்கும் சீனா
அரிய வகை காந்தம் இறக்குமதி உரிமம் வழங்க தாமதிக்கும் சீனா
ADDED : டிச 26, 2025 01:07 AM

புதுடில்லி: இந்திய நிறுவனங்களுக்கு, அரிய வகை தாதுக்களை இறக்குமதி செய்வதற்கான உரிமங்களை வழங்குவதில், சீனா தாமதம் செய்து வருகிறது.
எட்டு மாதங்களுக்கு முன்பு அரிய வகை தாதுக்களை ஏற்றுமதி செய்வதற்கு பல கட்டுப்பாடுகளை சீனா அறிவித்திருந்தது. குறிப்பாக, இறக்குமதி பொருட்களை வைத்து பேரழிவு ஆயுதங்கள், அவற்றை ஏவும் சாதனங்கள் போன்றவற்றை தயாரிக்க மாட்டோம் என்று உறுதிமொழி வழங்க வேண்டும் என கூறியது.
இந்திய நிறுவனங்கள் அவற்றை பூர்த்தி செய்த பிறகும், இறக்குமதிக்கு அனுமதி பெறுவதில் தாமதமாகி வருகிறது. உரிமம் கோரும் 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சீனாவின் முடிவுக்காக காத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
'மஹிந்திரா அண்டு மஹிந்திரா, மாருதி சுசூகி, போஷ், ஹோண்டா ஸ்கூட்டர்' உள்ளிட்ட சில நிறுவனங்களின் முகவர்களுக்கு மட்டுமே சமீபத்தில் அரியவகை காந்தங்கள் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை சீனா வழங்கியது.
இதற்கு முன்பு, 'ஜே உஷின்., டி டைமண்ட் எலெட்ரிக் இந்தியா, கான்டினன்டல் ஏ.ஜி., அஸ்டெமோ' நிறுவனங்களின் துணை நிறுவனங்களுக்கு உரிமங்கள் கிடைத்தன.
அரியவகை தாதுக்களிலிருந்து பெறப்படும் காந்தங்களுக்கான தேவை, வாகன உற்பத்தி, எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் செமி கண்டக்டர், அதிநவீன பாதுகாப்புக் கருவி தயாரிப்புத் துறைகளில் மிகவும் அதிகம்.

