உலக வர்த்தக ஏற்றத்தாழ்வுக்கு சீனாவே காரணம்: பியுஷ் கோயல்
உலக வர்த்தக ஏற்றத்தாழ்வுக்கு சீனாவே காரணம்: பியுஷ் கோயல்
ADDED : ஏப் 09, 2025 12:30 AM

மும்பை:உலகளவில் இப்போதைய வர்த்தக சமநிலையற்ற தன்மைக்கு, சீனாவே காரணம் என, மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பே, உலக வர்த்தக நடைமுறையை கேள்விக்குறியாக்கி உள்ளதாக, உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளால், இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மும்பையில் நடைபெற்ற 'இந்தியா குளோபல் போரம்' நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், மேலும் தெரிவித்ததாவது:
கடந்த 2001ம் ஆண்டு, உலக வர்த்தக மையத்தின் உறுப்பினராக சேர்ந்தது முதல், கடந்த 25 ஆண்டுகளில் சீனா அபரிமிதமான வளர்ச்சியை அடைந்துள்ளது.
அந்நாட்டின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதன் காரணமாக, நியாயமான நடைமுறையை பின்பற்றிய இந்தியா உள்ளிட்ட பிற நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது உலக வர்த்தக நடைமுறை எதிர்கொண்டு வரும் சிக்கல், திடீரென ஏற்பட்டதல்ல; பல ஆண்டுகளாக சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை யாரும் கேள்வி கேட்காமல் இருந்ததால் ஏற்பட்டுள்ளது.
உலக வர்த்தக மையத்தின் உறுப்பினரானதும், சீனா தாராளமயமாக்கலை முன்னெடுத்து, வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி, நியாயமான வர்த்தகக் கொள்கைகளை பின்பற்றும் என, உலக நாடுகள் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தன. ஆனால், அது நடக்கவில்லை.
மாறாக, போட்டித்தன்மையைக் குறைக்க, அடிமட்ட விலைக்கு பொருட்களின் விலையை நிர்ணயிப்பது, மானியம் வழங்குவதற்கு மறைமுக கட்டுப்பாடுகள் விதிப்பது, தெளிவற்ற பணியாளர் நடைமுறைகளை பின்பற்றுவது என, உலக வர்த்தக நடைமுறைகளுக்கு எதிராகவும்; அதே நேரத்தில் தனக்கு சாதகமாகவும் செயல்பட்டு வந்தது.
இவ்வாறு தெரிவித்தார்.
சீனாவின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளே, அந்நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இதன் காரணமாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன

