சீனாவின் பி - டீம் ஆசியான் அமைப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட பரிசீலனை
சீனாவின் பி - டீம் ஆசியான் அமைப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட பரிசீலனை
ADDED : ஜூலை 27, 2025 12:02 AM

புதுடில்லி,:சீனா வழியாக பொருட்குவிப்பு, இந்திய ஏற்றுமதிக்கு முட்டுக்கட்டை ஆகியவற்றால், 3.90 லட்சம் கோடியாக வர்த்தக சரிவை ஏற்படுத்தும் ஆசியான் அமைப்புடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேற இந்தியா பரிசீலிக்கிறது.
கடந்த 2009ல், ஆசியான் அமைப்பின் 10 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
துவக்கத்தில், அந்நாடுகளுடன் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 10 லட்சம் கோடி ரூபாயை கடந்த நிலையில், படிப்படியாக குறைந்து 2024 - 25ல் 3.90 லட்சம் கோடியாக சரிந்து விட்டது.
உலக நாடுகள் தங்கள் வர்த்தக விதிகளை கடுமையாக்கி வரும் நிலையில், 2009ல் ஆசியானுடன் ஐ.மு.கூட்டணி அரசு ஏற்படுத்திய தடையற்ற வர்த்தக ஒப்பந்த விதிகள் ஒரு சார்பாக அமைந்து விட்ட தாக விமர்சனம் உள்ளது.
சீனா வழியாக, ஆசியான் நாடுகள் இந்தியாவுக்குள் பொருட்களை குவிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்யும் நிலையில், விதிகளை மாற்றியமைக்க இதுவரை ஒன்பது முறை தற்போதைய தே.ஜ.கூட்டணி அரசு, ஆசியான் அமைப்புடன் பேச்சு நடத்தியுள்ளது.
ஆனால், பெரிய முன்னேற்றம் ஏற்படாத நிலையில், இந்தியா குளோபல் போரம் அமைப்பின் நிகழ்ச்சியில் பேசிய மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், சீனாவின் பி - டீம் என ஆசியான் அமைப்பை விமர்சித்துஉள்ளார்.
சீனப் பொருட்கள் குவிப்பில், சீனப் பிரதிநிதியாக இந்நாடுகள் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
பத்தாம் கட்ட பேச்சில் இது சரிசெய்யப்படாவிட்டால், ஆசியான் அமைப்பில் இருந்து விலகுவது பற்றி இந்தியா பரிசீலிக்கும் என, தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே, அமெரிக்கா, சீனாவுடன் வர்த்தக உறவில் பிரச்னையை இந்தியா சந்தித்து வரும் நிலையில், ஆசியான் அமைப்பும் அதில் மேலும் சிக்கலை ஏற்படுத்திஉள்ளது.
ஆசியான் நாடுகள் புருனே கம்போடியா இந்தோனேஷியா லாவோஸ் மலேஷியா மியான்மர் பிலிப்பைன்ஸ் சிங்கப்பூர் தாய்லாந்து வியட்நாம்

