ADDED : டிச 10, 2024 07:29 AM

பெய்ஜிங்: சீனாவில் பொருளாதார மந்தநிலைக்கு முக்கிய கவனம் செலுத்த முன்வந்துள்ள அந்நாட்டு ஆளும் கட்சி, நாட்டின் பணக்கொள்கையை 'விவேக'மான நிலையில் இருந்து, 'மிதமான' நிலைக்கு தளர்த்த ஒப்புக் கொண்டுள்ளது. இப்படி தளர்த்துவது கடந்த 14 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும்.
சீனாவில் கொரோனா காலத்துக்குப் பின், பொருளாதார வளர்ச்சி மந்தநிலைக்கு சென்றது. உள்நாட்டு தேவை பெரும் சரிவை சந்தித்ததால், உற்பத்தி பாதித்தது. அத்துடன் சீனப் பொருட்குவிப்பை தடுக்க, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் சீன இறக்குமதிக்கு அதிக வரிவிதிப்பு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தன. இதனால், சீனப் பொருளாதார மந்தநிலை நீடிக்கிறது.
இந்த சூழலில், அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான ஆளும் கட்சியான சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 'பொலிட்பீரோ' கூட்டம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதில் அடுத்த ஆண்டுக்கான பொருளாதாரக் கொள்கைகள் பற்றி ஆலோசிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பணக்கொள்கைகளில் பிடிவாதம் காட்டாமல், தளர்வுகளை அறிவிக்கவுள்ளதாக, சீன அரசு தெரிவித்துள்ளது. நுகர்வு கலாசாரத்தை தீவிரமாக அதிகரிக்கச் செய்தல், முதலீடுகளைக் கவர்வதற்கான வழிகளை ஆராய்தல், உள்நாட்டு தேவையை அதிகரித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*சீன கடன் பத்திரத்துக்கு வட்டி 1.92 சதவீதமாக சரிவு
* இரண்டாவது காலாண்டில் சீன பொருளாதார வளர்ச்சி 4.7%

