சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்
சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால் மின்னணு பொருட்கள் தயாரிப்பில் தாமதம்
ADDED : ஜன 19, 2025 12:13 AM

புதுடில்லி:சீனாவின் புதிய ஏற்றுமதி கட்டுப்பாடுகளால், நாட்டின் மின்னணு பொருட்கள், சோலார் மற்றும் மின்சார வாகன தயாரிப்பில் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சீன முதலீடுகளுக்கு இந்தியா விதித்த கட்டுப்பாடுகளுக்கு பதிலடியாக, சீனா இதனை மேற்கொள்வதாக, பொருளாதார ஆலோசனை நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ., தெரிவித்து உள்ளது.
இது குறித்து ஜி.டி.ஆர்.ஐ., அமைப்பின் நிறுவனர் அஜய் வத்சவா தெரிவித்துள்ளதாவது:
பேட்டரி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் ஏற்றுமதியை சீனா நிறுத்தி இருப்பதால், இந்தியாவில் மின்னணு, சோலார் மற்றும் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தேவையற்ற தாமதத்தையும், இடையூறுகளையும் சந்தித்து வருகின்றன.
சீனாவின் நியாயமற்ற கோரிக்கைகளுக்கு எதிராக இந்தியா உறுதியாக இருப்பதுடன், உள்நாட்டு உற்பத்தி, வினியோகத் தொடரை அதிகரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்த வேண்டும்.
சீனாவின் நடவடிக்கை, தீவிர புவிசார் அரசியல் பதற்றம், வர்த்தகப் போருக்கான அறிகுறியை வெளிப்படுத்துகிறது. இது விரைவில் சீனாவுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்தியா மீதான கட்டுப்பாடுகள் விரைவில் காணாமல் போகும் என, நம்பிக்கை உள்ளது.
எனவே, இந்தியா மின்னணு பொருட்கள் உள்ளிட்ட தயாரிப்புகளுக்கு, உயர்தர மூலப்பொருட்கள் கொண்ட ஜப்பான் மற்றும் தென்கொரியாவுடன் வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும். இது சீனாவை சார்ந்திருப்பதை குறைப்பதுடன், நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய வினியோகத் தொடரை உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

