தனியாருடன் இணைந்து தொழில் பூங்கா ஆய்வு பணிகளை துவக்கியது 'சிப்காட்'
தனியாருடன் இணைந்து தொழில் பூங்கா ஆய்வு பணிகளை துவக்கியது 'சிப்காட்'
ADDED : நவ 21, 2024 01:25 AM

சென்னை:தனியாருடன் இணைந்து தொழில் பூங்கா அமைக்க, ஆய்வுப் பணிகளை 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் துவக்கிஉள்ளது.
தமிழக அரசின் சிப்காட் நிறுவனம் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளுடன் தொழில் பூங்காக்களை ஏற்படுத்தி வருகிறது. அங்குள்ள தொழில்மனை களை, பெரிய நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க ஒதுக்கீடு செய்கிறது.
தொழில் பூங்காவை உருவாக்கும் பணியை, ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக சிப்காட் மேற்கொள்வதுடன், பராமரித்தும் வருகிறது.
தற்போது, தொழில் பூங்காக்களை உருவாக்குவதில், தனியார் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிக்கான நடவடிக்கையில் ஈடுபட உள்ளது.
இதுகுறித்து, சிப்காட் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தனியாருடன் இணைந்து பூங்கா அமைக்கும் போது, சாலை, மழைநீர் வடிகால் உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடியும்.
தற்போது பூங்கா அமைப்பதற்கான செலவை இரு தரப்பும் எப்படி மேற்கொள்வது, வருவாய் பகிர்வு, எந்தெந்த இடங்களில் பூங்கா அமைக்கலாம் என்பது தொடர்பான ஆய்வு நடந்து வருகிறது. இந்த பணி முடிந்ததும், பூங்கா அமைக்கும் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

