தொழிற்சாலை பிரச்னைகளுக்கு தீர்வு காண 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' திட்டம்
தொழிற்சாலை பிரச்னைகளுக்கு தீர்வு காண 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' திட்டம்
ADDED : பிப் 28, 2024 12:41 AM

சென்னை:தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனத்தின் தொழில் பூங்காக்களில் உள்ள தொழிற்சாலைகளின் பிரச்னைக்கு தீர்வு காண, 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' திட்டம் துவக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, மாதந்தோறும் முதல் திங்களன்று, அனைத்து சிப்காட் பூங்காவிலும், அதிகாரிகள் தலைமையில், குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
தமிழக அரசின், 'சிப்காட்' எனப்படும் தொழில் முன்னேற்ற நிறுவனம், 16 மாவட்டங்களில், ஆறு சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உட்பட, 28 தொழில் பூங்காக்களை அமைத்துள்ளது.
அவற்றில் உள்நாடு, வெளிநாடுகளை சேர்ந்த, 3,142 தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவை, வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ், மென்பொருள் என, பல துறைகளில் ஈடுபடுகின்றன.
இந்த தொழில் பூங்காவில் காணப்படும் பிரச்னை களுக்கு தீர்வு காண, 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' திட்டத்தை, சிப்காட் துவக்கியுள்ளது.
இத்திட்டத்தை, தொழில் துறை அமைச்சர் ராஜா, இம்மாதம், 24ம் தேதி திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட் தொழில் பூங்காவில் துவக்கி வைத்துள்ளார்.
அவரின் தலைமையில் அன்று நடந்த குறைதீர் கூட்டத்தில், தமிழக வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு, சிப்காட் மேலாண் இயக்குனர் செந்தில்ராஜ் மற்றும் கங்கை கொண்டான் சிப்காட் தொழிற்சாலைகளின் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.
அவர்கள், கங்கைகொண்டான் பூங்காவில், போக்குவரத்து வசதி, வங்கி வசதி, தீயணைப்பு வசதி, தனி துணைமின் நிலையம் ஆகியவற்றை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்தனர்.
போக்குவரத்து பிரச்னைக்கு உடனடி தீர்வு காண்பதாகவும், மற்ற கோரிக்கைகளுக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும் ராஜா உறுதி அளித்துஉள்ளார்.
இதைதொடர்ந்து, அடுத்த மாதம் முதல், மாதத்தின் முதல் திங்களன்று, அனைத்து சிப்காட் தொழில் பூங்காக்களிலும், 'சிப்காட் தொழில் நண்பன் சந்திப்பு' கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அந்த கூட்டம், தொழில் பூங்காவில் உள்ள சிப்காட் அலுவலகத்தில் நடக்கும்.
அதில், சென்னை சிப்காட் தலைமை அலுவலக பொது மேலாளர்கள், தொழில் பூங்கா அலுவலர்கள் மற்றும் பூங்காவில் உள்ள தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்பர்.
அவர்கள், தண்ணீர், போக்குவரத்து, சாலை என, தொழில் பூங்காக்களில் நிலவும் பிரச்னைகளை கேட்டறிந்து விரைந்து, தீர்வு காண நடவடிக்கை எடுப்பர்.
இதுதவிர, சிப்காட் சாராத, டி.டி.சி.பி., அனுமதி உட்பட மற்ற அரசு துறைகளின் சேவைகள் தொடர்பாக தெரிவிக்கப்படும் குறைகளுக்கும் தீர்வு காண உதவுவர்.
தண்ணீர், போக்குவரத்து, சாலை என, தொழில் பூங்காக்களில் நிலவும் பிரச்னைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்

