ஸ்ரீபெரும்புதுாரில் 'சிஸ்கோ' உற்பத்தி மையம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு
ஸ்ரீபெரும்புதுாரில் 'சிஸ்கோ' உற்பத்தி மையம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு
ADDED : செப் 27, 2024 10:47 PM

ஸ்ரீபெரும்புதுார்:சென்னையை அடுத்த, ஸ்ரீபெரும்புதுாரில் புதிய உற்பத்தி மையத்தை 'சிஸ்கோ' துவங்கியுள்ளது. இதன் மூலம் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் சிஸ்கோ நிறுவனம், தொலைதொடர்பு உபகரணங்கள் தயாரிப்பில் இயங்கி வருகிறது.
இந்நிறுவனம் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப, தொலைதொடர்பு உபகரணங்கள் மற்றும் தொலைதொடர்பு தொழிட் நுட்பத்தில் பல்வேறு பாதுகாப்புகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், ஸ்ரீபெரும்புதுாரில் இயங்கி வரும் 'பிளக்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து, தமிழகத்தில் தன் முதல் உற்பத்தி மையத்தை துவங்கியுள்ளது.
இதனை, மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, சிஸ்கோ தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சக்ராபின்ஸ், தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாகூறியதாவது:
சிஸ்கோவின் இந்த உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழா, உலகளாவிய தொழில்நுட்ப நிலப்பரப்பில், நாட்டின் தன்னிறைவை நோக்கிய பாதைக்கு ஒரு சான்றாகும்.
இந்த தொழிற்சாலை உலகளாவிய உற்பத்தி மையமாக மாறி, பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தும் என்பது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக தொழில் துறை அமைச்சர் ராஜா கூறியதாவது:
தமிழகத்தில் மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கான முக்கியமான மையமாக சிஸ்கோ மாறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
உலகளாவிய வினியோக தொடரில், நம் நிலையை இது மேலும் வலுப்படுத்துகிறது. குறிப்பாக, சிஸ்கோ உடனான ஒத்துழைப்பை வலுப்படுத்த அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சிஸ்கோ தலைவர் சக்ராபின்ஸ் கூறியதவாது:
கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக சிஸ்கோவுக்கு இந்தியா ஒரு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. மேலும், இங்கு எங்களின் முன்னேற்றம் மற்றும் கூட்டாண்மை குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.