சிறுதொழிலுக்கு பசுமை மின்சாரம் சிட்டி யூனியன் வங்கி கடன் திட்டம் ஐ.எப்.சி.,யிடம் ரூ.440 கோடி நிதி பெற்றது
சிறுதொழிலுக்கு பசுமை மின்சாரம் சிட்டி யூனியன் வங்கி கடன் திட்டம் ஐ.எப்.சி.,யிடம் ரூ.440 கோடி நிதி பெற்றது
ADDED : நவ 01, 2025 02:54 AM

சென்னை:சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சோலார் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதிகளை நிறுவ ஆதரவளிப்பதற்காக 440 கோடி ரூபாயை சர்வதேச நிதி நிறுவனத்திடம் இருந்து சிட்டி யூனியன் வங்கி பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.
கும்பகோணத்தை தலைமையிடமாக கொண்ட சிட்டி யூனியன் வங்கி, சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன் திட்டங்களுக்கான வசதிகளை செயல்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் பசுமை எரிசக்தி வசதிகளை ஏற்படுத்த 440 கோடி ரூபாயை ஐ.எப்.சி.,யிடம் இருந்து இவ்வங்கி பெற்றுள்ளது. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நேற்று கையெழுத்தானது.
இது குறித்து சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குநர் காமகோடி கூறியதாவது:
சோலார் மின் உற்பத்திக்கான கடன் வழங்குவதில் கடந்த நான்கு முதல் ஆறு காலாண்டுகளாக வளர்ச்சி கண்டு வருகிறோம். காற்றாலை மின் உற்பத்தி கட்டமைப்புக்கும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு கடன் தேவை உள்ளது.
கார்பன் வெளியீட்டை குறைத்து புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியை அதிகரிக்க நம் நாடு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நிதி ஆதரவு அளிப்பதில் சிட்டி யூனியன் வங்கி ஆர்வம் கொண்டுள்ளது. இதில், ஐ.எப்.சி.,யின் இந்த முதலீடு, வங்கிக்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

