நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா
நவீனமயமாக்க ரூ.10,000 கோடி நிதி திரட்டுகிறது ஏர் இந்தியா
ADDED : நவ 01, 2025 02:48 AM

புதுடில்லி: ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் உருவாக்குவதோடு, நவீனமயமாக்கலுக்கு 10,000 கோடி ரூபாய் நிதி தேவை என டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2022ல் அரசிடம் இருந்து, ஏர் இந்தியா விமான நிறுவனத்தை டாடா குழுமம் கையகப்படுத்தியது. ஏர் இந்தியாவின் 74.90 சதவீத பங்குகள் டாடா குழுமம் வசமும், மீதமுள்ள பங்குகள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் வசமும் உள்ளன.
இந்நிலையில், கடந்த ஜூனில் குஜராத்தின் ஆமதாபாதில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில், பயணிகள் உட்பட 270 பேர் உயிரிழந்தனர்.
இதனால், ஏர் இந்தியா மோசமான நெருக்கடி நிலையில் தவித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் தன் சேவையை வழக்கம் போல் தொடர்வதற்கு, நவீனமயமாக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஏர் இந்தியா தள்ளப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அமைப்பு ரீதியாக மற்றும் பொறியியல், பராமரிப்பு பிரிவுகளை மேம்படுத்த, டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸிடம் 10,000 கோடி ரூபாய் ஏர் இந்தியா நிதி கோரியுள்ளது.
இதனை, வட்டியில்லா கடன் அல்லது பங்குகள் வாயிலாக திரட்டுவதா என்பதை உரிமையாளர்கள் முடிவு செய்து கொள்ளுமாறு கேட்டுகொண்டு உள்ளதாக கூறப்படுகிறது.

