தேயிலை துாள் உற்பத்தி குறைந்தது காலநிலை மாற்றம் காரணம்
தேயிலை துாள் உற்பத்தி குறைந்தது காலநிலை மாற்றம் காரணம்
ADDED : ஜன 24, 2025 12:05 AM

குன்னுார்:காலநிலை மாற்றத்தால், நாட்டில் கடந்த ஆண்டில் தேயிலை துாள் உற்பத்தி குறைந்துள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னுாரில் உள்ள தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்கமான உபாசி சார்பில், சேகரிக்கப்பட்ட புள்ளி விபரங்கள் அடிப்படையில், கடந்த, 2023ஐ விட, கடந்த ஆண்டில், ஜன., முதல் நவ., வரை, நம் நாட்டின் தேயிலை உற்பத்தி குறைந்துள்ளதாக தெரிய வந்துஉள்ளது.
நாடு முழுதும், 2023ல், 11 மாதங்களில், 130.93 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், கடந்த ஆண்டு, 125.54 கோடி கிலோ தேயிலை துாள் உற்பத்தியானது. இதனை ஒப்பிடுகையில், 5.39 கோடி கிலோ தேயிலை உற்பத்தி குறைந்தது.
தென் மாநில உற்பத்தி
அதே நேரத்தில் தென் மாநிலங்களில், கடந்த 2023ல், 21.85 கோடி கிலோ உற்பத்தியான நிலையில், கடந்த ஆண்டு, 20.85 கோடி கிலோவாக இருந்தது. 1.01 கோடி கிலோ குறைந்தது.
தமிழகத்தில் மட்டும், 2023ல், 15.46 கோடி கிலோ உற்பத்தி இருந்த நிலையில், கடந்த ஆண்டு, 15.11 கோடி கிலோ உற்பத்தியானது.

