கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!
கோவையில் அசுர வேகத்தில் IT வளர்ச்சி! IT நிறுவனங்களின் சொர்க்கமாக கோவை மாற பிரதான 6 காரணங்கள்!
UPDATED : அக் 06, 2025 06:16 PM
ADDED : அக் 06, 2025 05:56 PM

டெக்ஸ்டைல்ஸ் உற்பத்தியில் உலக புகழ்பெற்று, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் நகரம் தான் கோயம்புத்தூர்.
தற்போது ஐடி துறையிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டு வருகிறது. விரைவில் அது தமிழகத்தின் பெங்களூரு என அழைக்கும் அளவுக்கு வந்துவிடும் என ஐடி நிபுணர்கள் கணிக்கின்றனர்.
2024 - 2025 ஆண்டில், தமிழகத்தின் அடுக்கு 2 நகரங்களின் ஐடி துறை ஏற்றுமதியில் கோவை முதலிடத்தில் இருக்கிறது. ₹15,000 கோடிக்கும் மேல் ஏற்றுமதி செய்துள்ளது. இரண்டாவது இடத்தில் உள்ள மதுரை ரூ1,905 கோடி மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
இரண்டு நகரங்களின் ஏற்றுமதியை ஒப்பிட்டு பார்த்தாலே, கோவை ஐடி துறையில் எவ்வளவு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை அறிய முடியும்.
இந்த அளவுக்கு கோவை வளர என்ன காரணம்? ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி ஏன் படையெடுக்கின்றன? உண்மையிலேயே அங்கு அவ்வளவு வளர்ச்சி இருக்கிறதா?
*கோவையில் ஐடி துறை வளர காரணம்*
சென்னையில் ஐடி துறை கால்பதித்தது முதலே, கோவையிலும் ஐடி நிறுவனங்கள் வர தொடங்கின. 2005ல் காக்னிசன்ட் தன்னுடைய முதல் நிறுவனத்தை கோவையில் நிறுவியது. அதன் பிறகே அடுத்தடுத்து ஐடி நிறுவனங்கள் கோவையை நோக்கி நகர ஆரம்பித்தன.
கோவையில் ஐடி நிறுவனங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட வேகமாக அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. அதற்கு 6 முக்கிய காரணங்கள் உள்ளன.
*முதல் காரணம் - நில வசதி*
ஐடி பூங்காக்கள் அமைக்க 1,00,000 சதுர அடி அளவில் நிலங்கள் தேவை உள்ளது. சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற நகரங்களில் இவ்வளவு பெரிய இடங்களை தேர்ந்தெடுப்பது சுலபம் இல்லை.
ஐடி பூங்கா அமைக்கும் நிறுவனங்கள், 2 முக்கிய விஷயங்களை எப்போதும் கவனிக்கும். அதாவது அருகருகே நிறுவனங்களை விரிவாக்கம் செய்ய இடம் உள்ளதா என்பதை ஆராயும். அடுக்குமாடி கட்டடங்கள் கட்ட போதுமான வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்யும். அதன் பிறகே அங்கு ஐடி நிறுவனம் அமைக்க முடிவு எடுக்கப்படும்.
மற்ற நகரங்களில் இது போன்ற வசதி குறையும் போது, கோவையை நோக்கி ஐடி நிறுவனங்கள் படையெடுக்கின்றன.
சென்னையில் ஓஎம்ஆர் ஐடி காரிடராக இருப்பது போல, கோவையில் சரவணபட்டி, அவினாசி சாலைகளில் தான் அதிகபடியான ஐடி நிறுவனங்கள் உள்ளன.
சரவணம்பட்டி பகுதியில் பல புதிய ஐடி பூங்காங்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. குடியிருப்புகளை கட்டி வந்த TANNY என்ற நிறுவனம், 4 லட்சம் சதுர அடியில், 15-அடுக்கு ஐடி பூங்காவை அமைத்து வருகிறது.
இது குறித்து TANNY SHELTERS நிர்வாக இயக்குனர் திரு சிவராமன் கந்தசாமி கூறும் போது
13 வருடமாக வில்லாஸ் மற்றும் அபார்ட்மெண்ட்கள் கட்டும் பணி செய்து வருகிறோம். கோவையில் ஆய்வு செய்த போது, ஐடி நிறுவனங்கள் அமைக்கும் ஆர்வம் வளர்ந்துள்ளதை அறிந்தோம். இதற்கு 2030க்குள் 1.5 கோடி சதுர அடி பரப்பளவு தேவையாக உள்ளது.
மேலும் பேசும் போது இதனால் 1.5 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். பணி ஆட்கள் தேவை அதிகரிக்கும். பொழுதுபோக்கு இடங்களும், குடியிருப்புகள் அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதாரம் உயரும். நிறுவனங்களின் செலவீடும் குறையும் லாபம் அதிகரிக்கும். எடுத்துக்காட்டுக்கு ஒரு நிறுவனம், பெங்களூருவில் 5 லட்சம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், இங்கு 3 லட்சம் செலவில் போதுமானதாக இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ஸ்டார்ட் அப்கள் அமைக்க ஏற்ற இடமாகவும் கோவை உருவெடுத்துள்ளது. இதே போல் தான் ஐதராபாத், பெங்களூரு நகரங்களும் வளர்ச்சி அடைந்தன. சாலை கட்டமைப்புகளும் அமைக்கப்பட்டது. அதே போல் கோவையும் மாறி வருகிறது.
சென்னை உள்ளிட்ட மற்ற நகரங்களை ஒப்பிடும் போது, கோவையில் நிலங்களின் மதிப்பு குறைவு என்பதால் ஐடி நிறுவனங்கள் அமைக்க ஏற்ற இடமாக மாறியுள்ளது.
*இரண்டாவது காரணம் - உள்கட்டமைப்பு*
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நகரமே மேலும் அழகாக மாறி வருகிறது. கோவை- அவினாசி மேம்பாலம் 10 கிமீ தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாடுக்கும் வரவுள்ளது. இதனால் போக்குவரத்து வசதி எளிமையாக்கப்படுகிறது. கூட்ட நெரிசலை சமாளிக்கும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படுவது கூடுதல் பலம் சேர்க்கிறது.
அவினாசி, மேட்டுப்பாளையம், திருச்சி, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு, சத்தியமங்களம், தடாகம், போன்ற பகுதிகளின் முக்கிய சாலைகள் கோவை நகரத்தை இணைக்கிறது. மேற்கு, கிழக்கு பைபாஸ் பணிகள், சத்தியமங்கலம் சாலை விரிவாக்கம் பணிகளால் கோவை முழு வீச்சில் வளர்ச்சி அடைகிறது.
மெட்ரோ சேவை வரவிருப்பதால், நகரமே 3 மடங்கு வளர்ச்சி அடையும். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருமானம் ஈட்டும் ரயில் நிலையமும் கோவைதான். 627 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, உலக தரத்துக்கு விமான நிலையம் மேம்படுத்தும் திட்டமும் உள்ளது.
*மூன்றாவது காரணம் - பருவநிலை*
மேற்கு தொடர்ச்சி மலையோரம் அமைந்துள்ள கோவையில் இயற்கை பேரிடர்கள் ஏற்படும் வாய்ப்புகள் பெரிதாக இல்லை.
சென்னையை போல் வெள்ளம் ஏற்படாது. இதனால் பணிகளும் பாதிக்கப்படாது. பெங்களூருவில் உள்ளது போல் தண்ணீர் பிரச்னையும் இல்லை. மும்பை, டெல்லி போல் இங்கு காற்று மாசுவும் இல்லை. எனவே கோவை நகரம் ஐடி நிறுவனங்கள் அமைக்க ஏற்ற இடமாக ஐடி நிறுவனங்கள் கருதுகின்றன.
*நான்காவது காரணம் - கல்லூரிகள்*
மனித வளமே ஐடி துறையின் முதுகெலும்பு. இங்குள்ள முன்னணி கல்லூரிகளில் இருந்து வெளிவரும் பட்டதாரிகள் வெவ்வேறு ஊருக்கு சென்று வேலை தேட வேண்டிய அவசியம் இனி இருக்காது. சொந்த ஊரிலேயே வேலை கிடைக்கும் வாய்ப்பை இந்த ஐடி நிறுவனங்கள் ஏற்படுத்தி இருக்கிறது.
*ஐந்தாவது காரணம் - பொழுதுபோக்கு*
அவினாசி சாலையை கடந்து செல்லும் போதே கோவை எவ்வளவு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை அறிய முடியும். ஒரு நாள் பயணமாகவே ஊட்டி, வால்பாறை, ஆழியாறு, கோவை குற்றலாம் போன்ற இடங்களுக்கு சென்று விடலாம். ஆன்மிக பக்கம் போக விரும்புவோருக்கு ஆழியாறில் வேதாந்திரி மகரிஷி, ஈஷா யோகா மையம் உள்ளன. பொழுதுபோக்குக்கு பஞ்சமில்லா இடமாகவும் கோவை இருக்கிறது.
*ஆறாவது காரணம் - மருத்துவமனைகள்*
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் ஏராளாமான மருத்துவமனைகள் உள்ளன. பல்வேறு நகரங்களில் இருந்தும் சிகிச்சைக்கு மக்கள் இங்கு வருகின்றன.
ஓர் நகரத்தில் ஐடி நிறுவனம் இருந்தால், 24 மணி நேரமும் அங்கு பணி நடந்துக்கொண்டு இருக்கும். இரவு, பகல் என எல்லா ஷிப்டுகளிலும் ஆண்கள் பெண்கள் பணிக்கு செல்ல வேண்டி இருக்கும். தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தரவுகள் படி, தேசிய அளவில் குறைவான குற்றங்கள் நடக்கும் இடங்கள் பட்டியலில் 3 வது இடத்தில் கோவை இருக்கிறது. எனவே இது மக்களுக்கு பாதுகாப்பான சூழலையும் உருவாக்குகிறது.
25 வருடங்களுக்கு முன் ஐடி நிறுவனங்கள் வளர்ச்சி ஆரம்ப காலம் எப்படி இருந்ததோ, அதே போன்ற தொடக்கத்தை கோவையில் காண முடிகிறது. எனவே, இன்னும் சில ஆண்டுகளில் கோவையில் ஐடி துறை வளர்ச்சி எதிர்ப்பாராத வளர்ச்சி அடையும் என்பது உறுதியாக தெரிகிறது.