ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு பயன்கள் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல்?
ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு பயன்கள் மக்களுக்கு கிடைப்பதில் சிக்கல்?
ADDED : அக் 05, 2025 10:55 PM

சென்னை:ஜி.எஸ்.டி., வரி சீரமைப்புக்குப் பின்னரும், செப்., மாதத்துக்கு முந்தைய அதிகபட்ச விலை அடிப்படையிலேயே அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்வதாக புகார் எழுகிறது. நாடு முழுதும் மறுசீரமைக்கப்பட்ட ஜி.எஸ்.டி., வரி, செப்., 22ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
வரி மறுசீரமைப்பில், மக்கள் அதிகம் பயன்படுத்தும் பெரும்பாலான அத்தியாவசிய பொருட்களுக்கான ஜி.எஸ்.டி., வரி, 12ல் இருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. சில பொருட்களுக்கான வரி, முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது.
ஆனால், வரி குறைக்கப்பட்ட பொருட்களை, சில்லரை வர்த்தகர்கள் பலர், பழைய விலைக்கே விற்பனை செய்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ., ஓ.பி.சி., அணி செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் கூறியதாவது:
மத்திய அரசு ஜி.எஸ்.டி.,யை குறைத்தாலும்கூட, சில டிபார்ட்மென்ட் ஸ்டோர்கள், மளிகை கடைகளில், பழைய அதிகபட்ச விலைக்கே அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
இதுபோல், பழைய ஸ்டாக் என்கிற பெயரில், 12 சதவீத வரியை உள்ளடக்கிய அதிகபட்ச விலைக்கும், வழக்கமான தள்ளுபடியை மட்டும் வழங்கிவிட்டு, புதிய நடைமுறைப்படியான வரி குறைப்பு செய்யாமலுமே விற்பனை செய்கின்றனர்.
இதனால், மத்திய அரசின் வரி குறைப்பு, மக்களுக்கு பயனளிக்காமல் போகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இப்பிரச்னை குறித்து, ஆடிட்டர் தனஞ்செயன் கூறியதாவது:
மக்களிடம் கையிருப்பு தொகை அதிகரித்து, உள்நாட்டில் பொருட்கள் நுகர்வு அதிகரிக்க வேண்டும். அதன் வாயிலாக, பொருட்கள் உற்பத்தி, வேலை வாய்ப்பு உயர வேண்டும் என்கிற நோக்கத்தில், மத்திய அரசு ஜி.எஸ்.டி., வரியை சீரமைத்துள்ளது. புதிதாக பேக்கிங் செய்யப்படும் பொருட்களில், வரி குறைப்புக்கு ஏற்ப, அதிகபட்ச விலை சரி செய்யப்பட்டுவிடும். ஆனால், செப்., 22ம் தேதிக்கு முன் பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில்தான், சில குளறுபடிகள் நடக்கின்றன.
வர்த்தகர்கள், இருப்பு பொருள் என கூறி, பழைய வரியோடு கூடிய அதிகபட்ச விலைக்கே பொருட்களை விற்பனை செய்தால், அது மிகப்பெரிய குற்றம். அரசு அளித்துள்ள வரி பயன்களை, நுகர்வோராகிய மக்களுக்கு முறையாக கொடுக்க வேண்டியது வர்த்தகர்களின் கடமை. சீர்படுத்த வேண்டியது, வரித்துறை அதிகாரிகளின் கடமை.
இவ்வாறு அவர் கூறினார்.