ADDED : அக் 01, 2025 12:43 AM

சென்னை, தமிழகத்தில் ஜி.எஸ்.டி.,யில் காணப்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண, வணிகர்கள் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குறைதீர் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
நாடு முழுதும் ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பு, செப்., 22ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், 5, 12, 18, 28 ஆகிய நான்கு அடுக்குகளில் இருந்த ஜி.எஸ்.டி., விகிதங்கள், 5, 18 சதவீதம் என, இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டன.
இதனால், மளிகை பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள், கார், மருந்து என, பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளன. அதற்கு ஏற்ப, பொருட்களின் விலைகளை குறைத்து விற்குமாறு வணிகர்களை, மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதிகளவில் பொருட்களை இருப்பு வைத்திருந்தவர்கள், விலைகளை குறைத்து விற்பதால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில், இதுபோன்ற பிரச்னைகளை களைவதற்காக ஜி.எஸ்டி., குறைதீர் குழுவை மத்திய ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைத்துள்ளது. இதில், வணிகர் சங்கங்கள் உட்பட, 11 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
இதுகுறித்து, ஜி.எஸ்.டி., அதிகாரி ஒருவர் கூறியதாவது:
குழுவில் உள்ள வணிகர் சங்கங்களின் பிரதிநிதிகள், தங்களின் சங்கத்தில் உள்ள வணிகர்கள் உட்பட ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோரிடம் காணப்படும் பிரச்னைகளை கேட்டறிந்து, மத்திய ஜி.எஸ்.டி., மற்றும் தமிழக வணிக வரித்துறை அதிகாரிகள் பங்கேற்கும் குறைதீர் கூட்டத்தில் தெரிவிக்கலாம்.
இக்கூட்டம் விரைவில் நடக்க உள்ளது. அதில், வணிகர்கள் தெரிவிக்கும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டு, ஜி.எஸ்.டி., கவுன்சிலின் கவனத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.