ADDED : அக் 22, 2024 10:16 AM

மும்பை: 'ஷபூர்ஜி பல்லோன்ஜி' குழுமத்தைச் சேர்ந்த 'அப்கான்ஸ் இன்பிராஸ்டிரக்சர்' நிறுவனம், புதிய பங்கு வெளியிடுவதன் வாயிலாக 5,430 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள முதலீட்டாளர்கள் வரும் 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பங்கு ஒன்றின் விலை 440 - 463 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் அடுத்த மாதம் 4ம் தேதி, பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும்.
புதிய பங்குகள் வாயிலாக 1,250 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்குகள் வாயிலாக 4,180 கோடி ரூபாயும் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.
திரட்டப்படவுள்ள நிதி, மூலதன செலவினத்துக்கும், கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கும், கட்டுமான உபகரணங்கள் வாங்குவது உள்ளிட்ட பிற தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்கட்டமைப்பு பிரிவில் இயங்கி வரும் அப்கான்ஸ் நிறுவனம், கடல் மற்றும் தொழில்துறை, நகர்ப்புற உள்கட்டமைப்பு, நீர், நிலத்தடி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய வணிகங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
'செபி' ஒப்புதல்
'நிவா பூபா ஹெல்த் இன்சூரன்ஸ், பரஸ் ஹெல்த்கேர்' ஆகிய இரு நிறுவனங்கள், பங்கு வெளியிட்டு நிதி திரட்ட செபி ஒப்புதல் அளித்து உள்ளது.
உடல்நலக் காப்பீடு பிரிவில் இயங்கி வரும் நிவா பூபா நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 3,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டுஉள்ளது.
புதிய பங்குகள் வாயிலாக 800 கோடி ரூபாயும்; பங்குதாரர்களின் பங்குகள் வாயிலாக 2,200 கோடி ரூபாயும் திரட்டப்பட இருக்கிறது.
'பரஸ் ஹெல்த்' என்ற பிராண்டின் கீழ் மருத்துவமனைகளை நடத்தி வரும் பரஸ் ஹெல்த்கேர் நிறுவனம், புதிய பங்குகள் மற்றும் பங்குதாரர்களின் பங்குகள் வெளியீட்டின் வாயிலாக 400 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளது.