சிட்கோ தொழிற்பேட்டைக்குள் ஐ.டி.ஐ., அமைத்து தர நிறுவனங்கள் கோரிக்கை
சிட்கோ தொழிற்பேட்டைக்குள் ஐ.டி.ஐ., அமைத்து தர நிறுவனங்கள் கோரிக்கை
ADDED : ஜன 03, 2025 01:24 AM

சென்னை, ஜன. 3-
தமிழகம் முழுதும் உள்ள, 'சிட்கோ' நிறுவனத்தின் தொழிற்பேட்டைக்குள், ஐ.டி.ஐ., எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களை துவக்குமாறு, தமிழக அரசுக்கு, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
தமிழக அரசின், 'சிட்கோ' எனப்படும் சிறு தொழில் வளர்ச்சி நிறுவனத்துக்கு, மாநிலம் முழுதும் 130 தொழிற்பேட்டைகள் உள்ளன. அவற்றில் பல நுாறு சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்நிறுவனங்களின் தேவைக்கு ஏற்ப பணியாளர்கள் கிடைக்க, 'சிட்கோ' தொழிற்பேட்டைக்குள் ஐ.டி.ஐ., நிலையங்களை அமைக்குமாறு, சிறு தொழில் துறையினர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினர் கூறியதாவது:
சிறு தொழில் நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை கொள்முதல் செய்யும் போது, பெரிய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் தரத்தில் அதிக கவனம் செலுத்துகின்றன. அதற்கு ஏற்ப, தரமான பொருட்களை உற்பத்தி செய்ய தற்போது, திறன்மிக்க பணியாளர்கள் இருக்க வேண்டும்.
இதற்காகவே, தொழிற்பேட்டைக்குள் ஐ.டி.ஐ., நிலையமும் இருக்க வேண்டும் என்ற நோக்கில் தான், பல ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்ட கிண்டி, அம்பத்துார் தொழிற்பேட்டைகளில், ஐ.டி.ஐ., நிலையங்கள் துவக்கப்பட்டன.
அரசு ஐ.டி.ஐ., நிலையங்களில் தொழிற்பயிற்சி முடிக்கும் மாணவர்களை, பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்கின்றன.
இதனால், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு திறன்மிக்க பணியாளர்கள் கிடைப்பது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே, சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்திற்குள் ஐ.டி.ஐ., நிலையங்களை அமைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன் வாயிலாக, அங்கு செயல்படும் தொழில் நிறுவனங்களுக்கு என்ன மாதிரியான திறனில் பணியாளர்கள் தேவை என்பதை கேட்டறிந்து, அதற்கு ஏற்ப ஐ.டி.ஐ., மாணவர்களுக்கு பாடத்திட்டங்களை சேர்க்கலாம்.
மாணவர்களும், படிக்கும் போதே தொழிற்சாலைகளின் சூழலை அறியும் வாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அரசு ஐ.டி.ஐ., மாணவர்களை, பன்னாட்டு நிறுவனங்கள் வேலைக்கு எடுத்து கொள்வதால், சிறு தொழில் நிறுவனங்களுக்கு திறன்மிகு பணியாளர்கள் கிடைப்பதில்லை

