ADDED : அக் 06, 2025 11:53 PM

சென்னை, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி உட்பட நான்கு இடங்களில் தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுலா தொழில் பூங்காக்களை அமைக்க, 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன.
'சிப்காட்' நிறுவனம், சுற்றுலா துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, தனியாருடன் இணைந்து சுற்றுலா தொழில் பூங்காக்களை அமைக்க உள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளத்தில், 35 ஏக்கரிலும், துாத்துக்குடி மீளவிட்டானில், 5 ஏக்கரிலும், கள்ளக்குறிச்சி கரியலுாரில், 20 ஏக்கரிலும், ஈரோடு தாளவாடியில், 2.93 ஏக்கரிலும் சுற்றுலா தொழில் பூங்கா அமைக்க இடத்தை, சிப்காட் நிறுவனம் வழங்கும்.
அங்கு, தனியார் நிறுவனங்கள் தங்கும் விடுதி, பொழுதுபோக்கு பூங்கா, பாரம்பரிய சுற்றுலா உள்ளிட்டவை தொடர்பான வசதிகளை ஏற்படுத்த வேண்டும். இதற்கு விருப்பம் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு கடந்த ஆகஸ்டில் அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு, 30க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து உள்ளன.