ADDED : அக் 06, 2025 11:57 PM

புதுடில்லி :தேவை மற்றும் புதிய ஆர்டர்கள் வளர்ச்சியின் வேகம் குறைந்ததால், நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி, கடந்த செப்டம்பர் மாதத்தில் சற்று குறைந்துள்ளதாக எச்.எஸ்.பி.சி., வங்கி தெரிவித்துள்ளது.
சேவைகள் துறை வளர்ச்சி குறித்து எச்.எஸ்.பி.சி., வங்கி மாதந்தோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்துக்கான தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 62.90 புள்ளிகளாக இருந்த சேவைகள் துறை வளர்ச்சி, செப்டம்பரில் 60.90 புள்ளிகளாக குறைந்துள்ளது. வளர்ச்சியின் வேகம் குறைந்துள்ளதே தவிர சரிவு பாதைக்கு செல்லவில்லை. இக்குறியீடு 50 புள்ளிகளுக்கு அதிகமாக இருந்தால், வளர்ச்சியையும்; குறைவாக இருந்தால் சரிவையும் குறிக்கும்.
சர்வதேச அளவில் இந்திய சேவை நிறுவனங்களுக்கான தேவை சற்று குறைந்துள்ளது. விற்பனை அதிகரித்துள்ளபோதிலும், கடந்த மார்ச் மாதத்துக்கு பின் குறைவான வேகத்தில் அதிகரித்துள்ளது.
வேறு சில நாடுகளின் சேவை துறை நிறுவனங்கள் குறைவான விலைக்கு சேவைகள் வழங்க முன்வந்ததே, ஏற்றுமதி ஆர்டர்களின் வளர்ச்சி குறைய காரணம் என நிறுவனங்கள் தெரிவித்தன.
பணவீக்கமும், விற்பனை விலையும் லேசான உயர்வு கண்டன. பணியமர்த்தல்களை பொறுத்தவரை, வெகு சில நிறுவனங்கள் மட்டுமே கூடுதல் பணியாளர்களை சேர்த்துள்ளன. எனினும், எதிர்கால வணிக சூழல் குறித்து நிறுவனங்கள் மிகுந்த நம்பிக்கையுடனேயே உள்ளன.
தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சியை குறிக்கும், கூட்டு பி.எம்.ஐ., குறியீடு கடந்த மாதம் 61 புள்ளிகளாக குறைந்துள்ளது. இது கடந்த ஆகஸ்டில் 63.20 புள்ளிகளாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.