திருமுடிவாக்கம் 'பொது வசதி' மையத்தை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
திருமுடிவாக்கம் 'பொது வசதி' மையத்தை பயன்படுத்த நிறுவனங்களுக்கு அழைப்பு
ADDED : டிச 09, 2024 12:47 AM

சென்னை:காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் பொது வசதி மையத்தில், ஒரு பொருளை வடிவமைப்பதுடன், அதை, '3டி' தொழில்நுட்பத்தில் அச்சிடும் வசதி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் உள்ளன. அவற்றை சிறு தொழில் நிறுவனங்கள் பயன்படுத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் பெரிய தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளன.
அந்நிறுவனங்களுக்கு தேவைப்படும் முக்கிய உதிரிபாகங்களை, சிறு தொழில் நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன.
இதற்கான வடிவமைப்பு, சோதனை போன்றவற்றுக்கு பெரிய தொழில் நிறுவனங்களின் உதவியை நாடுகின்றன. இதனால், அந்நிறுவனங்களுக்கு உற்பத்தி செலவு அதிகரிக்கிறது.
எனவே, காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம், 'சிட்கோ' தொழிற்பேட்டையில், அரசு மற்றும் திருமுடிவாக்கம் தொழிற்பேட்டை தொழில்முனைவோர் கூட்டமைப்பு இணைந்து, 47.62 கோடி ரூபாய் செலவில், 'பிரிசிஷன் இன்ஜினியரிங் தொழில்நுட்ப மையம்' எனப்படும் துல்லிய உற்பத்தி பொது வசதி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அதில், 33.33 கோடி ரூபாயை அரசு மானியமாக வழங்குகிறது.
அத்திட்டத்தின் முதல் கட்டமாக, 18.18 கோடி ரூபாயில், 'இன்ஜினியரிங் டிசைன் சென்டர், ரீ இன்ஜினியரிங் லேப், அடிட்டிவ் மேனுபேக்சரிங் சென்டர்' மற்றும் மேம்பட்ட பயிற்சி மையம், காப்புரிமை பதிவு வசதி மையம், நவீன பரிசோதனை மையம் போன்றவற்றை உள்ளடக்கிய பொது வசதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன.
இவற்றை பயன்படுத்தி, மிக குறைந்த செலவில் எவ்வித முதலீட்டு செலவும் இன்றி, தங்களின் தயாரிப்புக்கான புதிய கண்டுபிடிப்பு, வடிவமைப்பு, சோதனை உள்ளிட்ட சேவைகளை, சிறு தொழில் நிறுவனங்களும், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் புத்தொழில் நிறுவனங்களும் மேற்கொள்ளலாம்.
இந்த மையம் நவம்பரில் செயல்பாட்டிற்கு வந்தது. இதுகுறித்த விபரம் பலருக்கு தெரியாததால், சில நிறுவனங்களே இதை பயன்படுத்தி வருகின்றன.