ADDED : ஜூன் 07, 2026 01:02 AM

இக்சிகோ
ஆன்லைன் பயண சேவை தளமான இக்சிகோ, ஹோட்டல் புக்கிங் ஸ்டார்ட்அப் நிறுவனமான 'பிரெவிஸ்டே'வின் 54.66 சதவீத பங்குகளை 65.69 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்த உள்ளது. இந்த நடவடிக்கை முடிந்ததும், இக்சிகோவின் துணை நிறுவனமாக பிரெவிஸ்டே மாறும். வருங்காலத்தில் அதன் மீதமுள்ள பங்குகளையும் வாங்க இக்சிகோவிற்கு உரிமை கிடைக்கும்.
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் பேங்க்
ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கியின் சண்டிகர் கிளையில் நடந்த 646 கோடி ரூபாய் மோசடி, ஒரு தனிப்பட்ட சம்பவம் என்று கே.பி.எம்.ஜி., எனப்படும் சர்வதேச நிதி நிபுணர் குழு தெரிவித்துள்ளது. சில ஊழியர்கள், அரசு அதிகாரிகள் மூன்றாம் தரப்பினருடன் இணைந்து இந்த மோசடியில் ஈடுபட்டதாக அக்குழுவின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒய்.கே.கே.,
ஜப்பானின் ஒய்.கே.கே., நிறுவன முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில், தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. ஜவுளி போன்ற துறைகளில் பயன்படுத்தப்படும், 'ஜிப்பர்' உற்பத்தியில் ஈடுபட்டுள்ள இந்நிறுவனம், சென்னை அருகில், 1,800 கோடி ரூபாய் முதலீட்டில், 1,000க்கும் மேற்பட்டோருக்கு வேலை அளிக்கும் வகையில் ஆலை அமைக்க பரிசீலித்து வருகிறது.
டி.வி.எஸ். மோட்டார்
டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் தனது பிரீமியம் ரக மோட்டார் சைக்கிள்களுக்காக 'டி.வி.எஸ். பேடாக்' என்ற புதிய பிரத்யேக விற்பனை தளத்தை அறிமுகப்படுத்தியது. நம் நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் பிரீமியம் வாகன சந்தையை கவரவும், வாடிக்கையாளர்களுடன் நேரடி தொடர்பை பலப்படுத்தவும் இந்த விற்பனை தளம் தொடங்கப்பட்டுள்ளது.
