ADDED : ஜூலை 11, 2026 06:46 AM

ரூ.400 கோடி திரட்ட வீல்ஸ் இந்தியா முடிவு
சென்னையை தலைமையிடமாக கொண்ட வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் குழு, தங்களின் வர்த்தக விரிவாக்கத்திற்காக, 400 கோடி ரூபாய் வரை மூலதனம் திரட்டும் திட்டத்திற்கு அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மூலதனம், பங்குகள் அல்லது அது சார்ந்த பிற நிதி ஆதாரங்களை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளாக வெளியிடுவதன் வாயிலாக திரட்டப்பட உள்ளது.
ரூ.350 கோடி ரூபாய் திரட்டிய ஐஸ்வர்யா பெர்ட்டிலிட்டி சென்டர்
சென்னையை தலைமையிடமாக கொண்ட கருத்தரித்தல் மையமான ஐஸ்வர்யா பெர்ட்டிலிட்டி சென்டர், உலகளாவிய முதலீட்டு நிறுவனமான ஆர்சிமெட் ஏசியாவிடமிருந்து, 350 கோடி ரூபாய் மூலதனம் திரட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது. குறைந்து வரும் பிறப்பு விகித சவால்களுக்கு தீர்வு காணவும், அம்மையத்தின் உள்ட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது.
ரூ.495.80 கோடி ஒப்பந்தம் பெற்ற எச்.எப்.சி.எல்.,
உள்நாட்டு தொலைத்தொடர்பு சாதனங்கள் தயாரிப்பு நிறுவனமான எச்.எப்.சி.எல்., சர்வதேச தரவு மைய நிறுவனம் ஒன்றிடமிருந்து, 495.80 கோடி ரூபாய் மதிப்பிலான ஆப்டிகல் பைபர் கேபிள் வினியோகத்திற்கான ஆர்டரை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தம், இந்நிறுவனத்தின் உலகளாவிய வினியோக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதானியுடன் பிரான்ஸ் நிறுவனம் ரசாயன தயாரிப்பில் கூட்டணி
அதானி என்டர்பிரைசஸ் நிறுவனம், இந்தியாவில் குறைந்த கார்பன் உமிழ்வு ரசாயனங்களை உற்பத்தி செய்வதற்காக, பிரான்சின் துாய்மை தொழில்நுட்ப நிறுவனமான டயாக்ஸிகல் உடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் வாயிலாக, வளிமண்டலத்தில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட கார்பன் டை ஆக்சைடு மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை பயன்படுத்தி, பார்மிக் அமிலம் தயாரிக்கப்பட உள்ளது.
ஏர் இந்தியாவுக்கு உலகளவில் 4வது இடம் ஏர் இந்தியா நிறுவனம்
கடந்த ஜூன் மாதத்தில் உலகளவில் நேரத்தை மிகவும் துல்லியமாக பராமரிக்கும் ஏர்லைன்ஸ் வரிசையில், நான்காவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் தன் விமான சேவைகளில், 86.85 சதவீதத்தை குறித்த நேரத்தில் பதிவு செய்துள்ளது. வினியோக கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தொடர் முதலீடுகளே இதற்கு காரணம் என்று இந்நிறுவனம் கூறியுள்ளது.
