பாலிமேடெக் செமிகண்டக்டர்: சிறப்பு பொருளாதார மண்டல அனுமதி
பாலிமேடெக் செமிகண்டக்டர்: சிறப்பு பொருளாதார மண்டல அனுமதி
ADDED : ஜூலை 11, 2026 06:45 AM

புதுடில்லி: சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில், செமிகண்டக்டர் உற்பத்திக்கான சிறப்பு பொருளாதார மண்டலத்தை (எஸ்.இ.இசட்.,) அமைக்க, பாலிமேடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதற்கான அரசிதழ் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: தமிழகத்தை சேர்ந்த பாலிமேடெக் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு சத்தீஸ்கரின் நவ ராய்ப்பூரில் செமிகண்டக்டர் மற்றும் மின்னணு சாதன சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளிக்கிறது. நவ ராய்ப்பூரின் மந்திர் ஹசாத் பகுதியில், 10.13 ஹெக்டேர் பரப்பளவில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
ஏற்றுமதியை மையமாக கொண்ட செமிகண்டக்டர் மற்றும் மின்னணு உதிரிபாகங்கள் உற்பத்தியை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் மின்னணு உற்பத்தி திறனை வலுப்படுத்தவும் இந்த திட்டம் உதவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மண்டலத்துக்கான உட்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு, விரைவில் செயல்பாட்டுக்கு வரும் என்றும் பாலிமேடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
